இந்திய-சீன ராணுவம் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை

471 0

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில், நடைமுறை எல்லைக்கோடு அருகே பன்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்தியா சாலைகள் அமைத்து வருகிறது.

இந்த சாலைகள் கட்டப்பட்டால், எல்லைக்கு இந்தியா எளிதாக படையினரையும், ஆயுத தளவாடங்களையும் அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பன்காங் ஏரி அருகே, அனுமதிக்கப்பட்ட இடம்வரை இந்திய ராணுவம் ரோந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த மாதம் 5-ந்தேதி, அந்த இடத்துக்கு 5 கி.மீ.க்கு முன்பே அவர்களை சீன ராணுவம் தடுக்க முயன்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் சிலர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்தினரும் படைகளை குவித்ததால், அங்கு சுமார் ஒரு மாதமாக பதற்றம் நிலவுகிறது.

இதற்கு தீர்வு காண கடந்த 2-ந் தேதி, மேஜர் ஜெனரல் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, வருகிற 6-ந் தேதி உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லடாக்கில் சுசுல் மோல்டோ என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.

கமாண்டர் அந்தஸ்து கொண்ட இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள். எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவுவதால், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று ராணுவ உயர் அதிகாரி செங்குப்தா தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3½ கி.மீ. நீள விமான தளம் போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.