பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் வென்டிலேட்டர்கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.
கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருசேர கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அப்படியே போராடி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறவர்களுக்கு இந்தியாவில் இருந்து பல கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோன்று இந்தியாவில் கொரோனாவால் அவதிப்படுகிறவர்களுக்காக அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக அனுப்பி வைக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதையொட்டி அவர் கடந்த மாதம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதில் பெருமைகொள்கிறேன். இந்த தொற்று நோய் பரவி வரும் காலகட்டத்தில் இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் துணை நிற்போம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நாம் ஒன்றாக சேர்ந்து வெல்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியுடன் டிரம்ப் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்தியாவுக்கு நன்கொடையாக அறிவிக்கப்பட்ட 100 வென்டிலேட்டர்களின் முதல் தொகுப்பு, அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின்போது, பிரதமர் மோடியுடன் டிரம்ப் ‘ஜி-7’ உச்சி மாநாடு, கொரோனா வைரஸ் தொற்று பரவல், பிராந்திய விஷயங்கள் என பலவற்றை குறித்தும் விவாதித்தார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தான் நடத்திய பேச்சு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்புடன் உரையாடினேன். அது அன்பானதும், பயனுள்ளதுமானது. கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்றும் பல பிரச்சனைகள் குறித்த அவரது திட்டங்களை நாங்கள் விவாதித்தோம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய உலகளாவிய கட்டமைப்பில் இந்திய, அமெரிக்க ஆலோசனைகளின் செழுமையும், ஆழமும் அப்படியே இருக்கும்.
இவ்வாறு மோடி அந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையாடல் பற்றி பிரதமர் மோடியின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
ஜி-7 நாடுகள் அமைப்பு பற்றி பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். மேலும் தற்போதைய உறுப்பினர்களை தாண்டி இந்த குழுவின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பதையும் தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட பிற முக்கிய நாடுகளை அதில் சேர்ப்பது பற்றியும் பேசினார். இந்த சூழலில் அமெரிக்காவில் நடைபெற உள்ள அடுத்த ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
டிரம்பின் தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி பாராட்டினார். இதுபோன்ற விரிவாக்கப்பட்ட அமைப்பு நன்றாக இருக்கும் என்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி இதுபற்றி கூறுகையில், “உத்தேச உச்சி மாநாட்டின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது” என குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் தற்போது நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். நிலைமையை முன்கூட்டியே தீர்ப்பதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இரு நாடுகளிலும் நிலவுகிற கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்திய சீன எல்லைப்பிரச்சனை, உலக சுகாதார நிறுவனத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் பேசினர்.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு பேசுகையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தது குறித்து அன்புடன் நினைவுகூர்ந்தார். பிரதமர் மோடி, டிரம்பின் இந்த பயணம் பல அம்சங்களில் மறக்க முடியாதது. இரு தரப்பு உறவில் புதிய ஆற்றலை சேர்த்துள்ளது என குறிப்பிட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.