கொரோனா நோய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் பயனை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை சில நிபந்தனைகளோடு மீண்டும் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஆணையிட்டார். அதனை தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் உடல் உறுப்பை நன்கொடை மூலம் பெறும் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனைகள் கடைப்பிடிக்க வேண்டிய விரிவான வழிமுறைகள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நன்கொடையாளர் மற்றும் பெறுனர் மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல்கள் வருமாறு:-
இத்திட்டத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவமனையில் செயல்படுத்தக்கூடாது. இம்மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாளர்களுக்கு தனி பாதை அமைத்து செயல்பட வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தனி வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றை அமைக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர், மற்ற பொது நோயாளிகள், சந்தேகத்திற்கிடமான கொரோனா நோயாளிகளுடன் ஒரே தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடாது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ வல்லுனர்கள், ஆலோசகர்கள், பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அறுவை அரங்கத்தில் பணியாற்றும் நபர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு பிரத்யேகமாக பயன்படுத்த வேண்டும். அவர்களின் சேவைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தப்படக்கூடாது.
இத்திட்டத்திற்கான முழு குழுவினரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன என்பதை மருத்துவமனைகள் ஒரு உறுதிமொழியைக் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.