வடமாகாண கல்வித்துறையை மீள் எழுச்சியடைய ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஆளுநர்

398 0

வட மாகாணத்தில் கல்வியின் நிலை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அந்த நிலைமைகளை முழுமையாக மாற்றியமைத்து மறுமலர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்குரிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குசவதற்கு தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

தாய்மொழியான தமிழில்ல சித்தியடையாத துர்ப்பாக்கிய நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழினம் மீண்டெழுவதற்கான கூர்மையான ஆயுதம் கல்வி என்பதை அனைவரும் உணர்ந்து பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ{க்கும், வடமாகாண கல்வி அமைச்சு, கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைத்து கல்வித்துறை சார் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஆளுநரின் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது வடமாகாண கல்வியின் நிலைமை, மற்றும் உலகளாவிய உதாரணங்கள், எதிர்கால திட்டங்கள், தான் வழங்கவுள்ள பங்களிப்புக்கள் தொடர்பில் ஆளுநர் கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

முதலாவதாக வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான வளப்பகிர்வு முறையாகவும் பயனுள்ள வகையும் நடைபெறுகிறதா? என்ற கேள்வி எழுக்கின்றது. அவ்வாறான செயற்பாடுகள் வினைத்திறனாக நடைபெற்றிருந்தால் நமது மாகாணத்தின் கல்வி நிலை இவ்வாறான பின்னடைவை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன்.

நமது மாகாணத்தில் ஏறத்தாழ 247000 பாடசாலை மாணவர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் என்ற அடிப்படையில் ஆசியர்களின் எண்ணிக்கையும் உள்ளது. தேசிய அளவில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமையே காணப்படுகின்றது.

ஆசிரியர் ஒருவர் 12மாணவர்களை முறையாக முகாமை செய்து கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் முன்னேற்றகரமான நிலைமையை கண்டிருக்க முடியும். தற்போது தாய் மொழியான தமிழில் கூட மாணவர்கள் சித்தியடையாத துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருக்காது. தாய்மொழியில் மாணவர்கள் சித்தியடையாத நிலைமை ஏன் ஏற்பட்டுள்ளது என்பதற்கு விடை காணவேண்டியுள்ளது.

கடந்த 10 வருடங்களில் அரசாங்கம் மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியானது உயர்வடைந்து கொண்டேதான் சென்றிருக்கின்றது. கடந்த ஆண்டு ஒரு மாணவனுக்கு ஏறத்தாழ 56000 ரூபாவை முதலீடு செய்துள்ளது.

வருடமொன்றில் ஆசிரியர்கள் 153 நாட்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

அவ்வாறிருக்கையில் அவர்களால் தரமான கல்வியை மாணவர்களுக்கு ஏன் வழங்க முடியாத நிலை ஏற்படுகின்றது. நமது நாட்டில் கிராமப்புற பாடசாலைகளில் படிப்பை இடைநிறுத்தும் செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை 80 முதல் 90 சதவீதமாக இருக்கின்றது. இந்த நிலையில் கல்வியின் தரத்தை எப்படி உயர்வடையச் செய்வது.

<p>ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் குடும்பப் பின்னனியை நிச்சயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஆசிரியர்கள் அவ்வாறு பின்னணியை தெரிந்து வைத்துள்ளனரா?

ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிரிடுவதற்குமுன் அந்த நிலத்தின் தன்மையையும் எந்த விதமான பயிர்செய்யலாமெனவும் ஆராய்ந்த பின்னரே பயிரிடுகிறார். ஆனால் ஆசிரியர்கள் தமது மாணவர்களின் குடும்பப்பின்னனி தெரியாது எப்படி கற்பிக்க முடியும்.

போரின் நிறைவடந்து தற்போது 10 வருடங்களுக்குப் பின்னர் நமது மாகாணத்தின் கல்வியின் நிலை உள்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. விமர்சனங்களுக்கு அப்பால் இத்தகைய பின்னடைவான நிலை பெரும் மனவருத்தத்தை தருவதுடன் எதிர்வரும் காலத்தில் எமது சமுதாயத்தின் நிலை எப்படியிருக்கப்போகிறதோ என்ற பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

வெறுமனே கற்றலில் தோற்றுப்போன மாணவர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வாழ்க்கையிலே தோற்றுப்போன ஒரு சமுதாயத்தின் நிலையாகத்தான் இதைப்பார்க்கவேண்டியுள்ளது. இந்த சமுதாயம் தோற்றுப்போய் உள்ளதா அல்லது தோல்வியை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ற வினாக்களையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான போக்கால் ஏற்படும் சமுதாயத்தின் தோல்வியின் இறுதிக்கட்டம் எப்படியிருக்கும் என்பதுதான் இங்குள்ள உண்மையான பிரச்சினை. போர்களில் ஏற்படும் தோல்வியை விடவும் கல்வியில் ஒரு சமுதாயம் தோற்றுப்போவது தான் பாரிய தோல்வியாகவுள்ளது. உலக போர்களிலே தோற்றுப்போன நாடுகள் பொருளாதார போர்களிலோ, தொழில் புரட்சிகளிலோ தோற்றுப்போகவில்லை. மாறாக போர் அனுபவங்களை வைத்து வெற்றியையே கண்டார்கள்.

உதாரணமாக அணுகுண்டுத்தாக்குதருக்கு இலக்கான ஜப்பான் தன்னை சொற்ப காலத்தில் ஆளாக்கிக் கொண்டது, வியட்நாம் வேகமாக முன்னேறியது, சீனா உலகை ஆளுவதற்கு நகர்ந்துகொண்டிருக்கின்றது.

காலணித்துவ ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துள்ள ஆபிரிக்க நாடுகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான முன்னுதாரணங்கள் காணப்படுகின்ற நிலையில் போரின் பின்னரான சூழலில் நாம் எவ்வளவு தூரம் முன்னோக்கிச் செல்கின்றோமென்பதில் தான் நமது வெற்றி இருக்கிறது.

நெல்சன் மண்டேலா சொன்னதைப்போல கல்வியென்பது ஒரு கூர்மையான பலமிக்க ஆயதம். அதை வைத்துக் கொண்டு உலகத்தையே மாற்றிவிடலாம் என்று கூறினார். அந்த ஆயுதத்தால் தான் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களை அவர் விடுவித்து முன்னேற வைத்தார். அஹிம்சைப்போராட்டத்தினை முன்னெடுத்த மகாத்மா காந்தியும் இந்த நிலைப்பாட்டிலேயே இந்தியா சுதந்திரத்தினை பெறுவதற்கான நகர்வுகளைச் செய்தார்.

காலணித்துவ ஆட்சிக்காரர்கள் வடமாகாணத்திலிருந்து தான் உத்தியோகத்தர்களை அவர்களின் நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள். 1980களில் எமது மாகாணத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, பர்மா, ரங்கூண், ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளுக்கு எமது கல்விமான்கள் புலம்பெயர்ந்து போனார்கள். சிலர் திரும்பி வந்தார்கள.; பலர் திரும்பி வரவில்லை அவர்களுடனான உறவுகள் கூட துண்டிக்கப்பட்டு விட்டன. எலிசெபத் மகாராணிக்கு கணிதபாடம் கற்றுக்கொடுத்தவர் நமது யாழ் மண்ணைச்சார்ந்த பேராசிரியர்.சுந்தரலிங்கம். இதுபோன்று பல பெருமைகளை தன்னகத்தே கொண்டது வடமாகாணம்.

அதுமட்டுமன்றி 1970க்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளுக்கும் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைத்தோம். ஆனால் நிமைகள் மோசமடையவும் 1980களில் அகதிகளை அனுப்பி வைத்தோம். 2000 ஆண்டிற்கு பிறகு படகுகளில் அநாதைகளாக ஆட்களை அனுப்பி வைத்தோம். இப்போது இந்த மாகாணத்தில் சமூக குற்றவாளிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள். முhகாணத்தின் நிலைமைகள் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதென்பதை வரலாற்று ரீதியாகப் பார்த்தால் நன்றாக உணரமுடிகின்றது.

1930, 1940 களில் இந்தியாவிலிருந்து கூலித்தொழிலாளர்கள் மலையகத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் 39சதவீதமும், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 38 சதவீதமும் நாசாவில் இருக்கிற விஞ்ஞானிகளில் 34 சதவீதமும் கூகுள் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களில் 39.8 சதவீதமும் இந்தியர்களாக இருக்கின்றார்கள். இதுதான் எமது அயல்நாடான இந்தியாவின் நிலையாக இருக்கின்றது.

இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு கல்வே அடிப்படையில் காரணமாகின்றது. நாம் இழந்து கொண்டிருக்கின்றோம். பிறிதொரு தரப்பினர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். போரால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எதிர்காலம் அவர்களின் பிள்ளைகளிடத்திலேயே உள்ளது. ஆனால் தரமற்ற கல்வியால் அந்தக் குடும்பங்கள் மேலும் கீழ் நிலைக்குச்சென்று கொண்டிருக்கின்றன.

ஆகவே நமது மாகாணத்தின் கல்வி நிலையை மேம்படுத்த தடையாக இருக்கின்ற அத்தனை விடயங்களையும் சீர்செய்ய நான் உதவுகின்றேன் கல்வி திணைக்கள செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சுயவிருப்பத்தோடும் பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் கடமையாற்ற வேண்டியது அவசியமாகின்றது.

கல்வித்துறையினரின் நியாயமான பிரச்சினைகளை மாகாண சட்டங்களுக்கு உட்பட்டவற்றுக்கு உடனடியான தீர்வுகளை வழங்கி நிறைவேற்ற நான்; மாகாண பணிப்பாளர் மற்றும் கல்வி தினைக்கள செயலாளர் ஊடாக ஒத்துழைப்பேன். அத்துடன் மத்திய அரசு ஊடாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை முன்னெடுக்க தயாராகவுள்ளேன் என்றார்.