2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி, கட்சி யாப்புக்கு இணங்க மாற்றப்படுமாக இருந்தால், அதனை தமது தரப்பினர் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்கா ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரணில் ஆதரவாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், எந்தவொரு பின்வாங்கலும் இல்லாமல், சஜித் பிரேமதாஸவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க முயற்சி செய்திருந்தோம். இதற்காக நாம் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பினை வழங்கினோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்ட அந்தக் கூட்டத்தின்போது, 2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுவரை கட்சியின் தலைவராக ரணில்விக்கிரமசிங்க செயற்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அப்போது சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஏன் சஜித் பிரேமதாஸ தரப்பினர், கட்சித் தலைமையில் மாற்றமொன்று ஏற்படவேண்டும் என கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
2023 ஆம் ஆண்டுக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்கவை நாம் கட்சித் தலைமையிலிருந்து விலக்குவதானால், மீண்டுமொரு கட்சி மாநாட்டை கூட்டி, யாப்புக்கு அமைவாகவே அந்த செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான முறையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாம் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை.
அதனைவிடுத்து, அடாவடித் தனமாக தலைமைத்துவப் பதவியை பெற்றுக் கொள்ள அந்தத் தரப்பினர் முற்படுவார்களாயில், அதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலாக இன்னொரு அரசியல் செயற்பாட்டை மேற்கொள்ளவே இவர்கள் முற்படுகிறார்கள்.
இவர்களின் தொலைப்பேசி கூட்டணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் அனுமதி கிடைக்காத காரணத்தினால்தான், நாம் அந்தத் தரப்பினரின் உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்“ எனத் தெரிவித்துள்ளார்.