ஜி-7 நாடுகள் அமைப்பில் இந்தியா உள்பட 4 நாடுகளை சேர்க்கும் டிரம்ப் யோசனைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜி-7 நாடுகள் எனப்படும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைமை பொறுப்பில் அமெரிக்கா இருக்கிறது.
இதற்கிடையே, இந்த அமைப்பை ஜி-11 நாடுகள் என்ற அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும், இந்தியா, ரஷியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய 4 நாடுகளை சேர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-
சர்வதேச அமைப்புகள், மாநாடுகள் போன்றவை உலக அமைதியையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும்வகையில், நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது.
சீனாவுக்கு எதிராக ஒரு வட்டம் போட முயன்றால், அது தோல்வியில் முடிவடையும். அது வரவேற்பை பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், சீனாவின் நட்பு நாடான ரஷியாவை சேர்க்கும் டிரம்பின் யோசனையும் சீனாவுக்கு கவலை ஏற்படுத்தி உள்ளது. ரஷியாவை சேர்ப்பதற்கு இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.