சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்

269 0

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இம்மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ஊரடங்கு அமலில் இருந்த போதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிகள் ஓட அனுமதிக்கப்பட்டுள்ளது.

டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அதை கட்டுப்படுத்த மேற்கண்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த போலீசார் நேற்று முதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி 2 பேர் சென்ற மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீசார் மடக்கி ரூ.500 அபராதம் விதித்தனர். ஏற்கனவே முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் நிலையில், அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் தவிர தேவை இல்லாமல் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்கவே இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.