ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வெடிக்க வைத்தனர்.
இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில்நேற்று (02) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.
கடந்த யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டவை என சந்தேகிக்கப்படும் வெடிபொருட்களே இவ்வாறு அதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கறைப்பற்று பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
மேலும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சாவின் அனுமதியை பெற்று பொருத்தமான இடத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் யாவும் செயலிழக்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த ஆற்றங்கரையோரத்தில் மர்மமான முறையில் பொதியொன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்று சந்தேகத்திற்கு இடமான பொதியை பார்வையிட்ட பின்னர் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ளியு.எம்.எஸ்.விஜயத்துங்க தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மற்றும் சாகாமம் கல்முனை விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்கு வருகைதந்து மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து ஆர்.பி.ஜி-04, கிளைமோர் குண்டு-02, 60 மில்லி-02, 81 மெகசின்-12, 81 மெகசின் கைக் குண்டு-02 ஆகிய வெடி பொருட்களை மீட்டு செயலிழக்க வைத்தனர்.