ஐ.எஸ் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பொறுப்பேற்றது ஏன்?

285 0

சமூக வலைத்தள கணக்குகள் மூலம் தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கடிதம் மூலம் கோரிய போதிலும் அதற்கு அவர் உரிய பதிலை வழங்கவில்லை என்ற விடயம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.

அதேபோல் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் சஹ்ரான் ஹசீம் நாட்டின் 6 இடங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியமை குறித்தும் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்த பயங்கரவாத மற்றும் விசாரணை பிரிவின் சிரேஸ்ட அதிகாரி மீண்டும் நேற்று (02) சாட்சியம் வழங்கினார்.

தாக்குதலுக்கு முன்னர் அதாவது மார்ச் மாதம் 28 ஆம் திகதி மாவனெல்லையில் புத்த பெருமானின் சிலையை சேதப்படுத்தியமை, வனாத்துவில்லு லெக்டோவத்தையில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டதையும் அவர் ஆணைக்குழுவில் வெளிப்படுத்தினார்.

தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹசீம் நாட்டின் ஆறு இடங்களில் 11 பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும் சாட்சியாளர் இதன்போது கூறினார்.

அந்த முகாம்கள் ஹம்மாந்தோட்டை, செட்டிகுளம், கண்டி, லேவெல்ல, மல்வானை, நுவரெலியா பிளக்பூல், நுவரெலியா சாந்திபுரம் மற்றும் மதவாச்சி தல்காவெவ ஆகிய இடங்களில் இருந்தாகவும் அவர் கூறினார்.

அந்த பயிற்சிகளில் 25 முதல் 30 பேர் வரை பங்கேற்றதாக அவர் கூறியதோடு சில பயிற்சியாளர்கள் இறந்துவிட்டதாகவும், எஞ்சியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் காணொளி பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும் அது கல்கிஸ்ஸ Span Towers அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒளிபதிவு செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.

எனினும் தாக்குதலுக்கு பின்னர் உயிரிழக்காத பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஐ.எஸ் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமாக் என்ற செய்தி நிலையத்திற்கு அந்த வீடியோ காட்சிகளை அனுப்பியதாகவும், அதனை அவர்கள் பார்வையிட்ட பின்னரே தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, சஹ்ரான் ஹசீம் தமது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்த தீவிரவாத பதிவுகள் குறித்து சாட்சியமளித்த பயங்கரவாத மற்றும் விசாரணை பிரிவின் சிரேஸ்ட அதிகாரி, சஹ்ரான் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6 திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரிவினைவாத கருத்துக்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுவந்துள்ளதாக கூறினார்.

இவ்வாறு தான் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய கிடைத்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தாகவும் அதற்கு அவர் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் மேலதிக அறிக்கைகளை மாத்திரமே அவர் கோரியதாகவும் சாட்சியாளர் கூறினார்.

அதன்பின்னர் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸ் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் குறித்து ஆணைக்குழு கவனஞ்செலுத்தியது.

சஹ்ரான் தனது பேஸ்புக் கணக்கில் கடந்த 2018 ஆன்டு மார்ச் 5 ஆம் திகதி ஒரு தீவிரவாத பதிவை வெளியிட்டிருந்தமை குறித்தும் அதனை அவர் 96 பேருக்கு பகிர்ந்திருந்தமை குறித்தும் அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கு எடுத்து கூறி அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தாகவும் சிசிர மெண்டிஸ் ஆணைக்குழுவில் கூறினார்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி ஃபாரூக், சஹ்ரானுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை குறித்து புலனாய்வு பிரிவினரின் ஊடாக அறிய கிடைத்திருந்தாலும் தாம் மேற்கொண்ட விசாரணைகளில் அது குறித்த தகவல் வெளியாகவில்லை என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தாக்குதலுக்குப் பின்னர் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கள் வழியாக பரவியதாகவும் அதில் சஹ்ரானின் சகோதரர் ரில்வான் சுகயீனம் அடைந்து வைத்தியசாலையில் இருக்கும் போது முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் அவரை பார்வையிட்டமை குறித்து காண்பிக்கப்பட்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.

சஹ்ரான் ஹசிம் தனது பேஸ்புக் கணக்கு மூலம் பல ஆண்டுகளாக தீவிரவாத கருத்துக்களை பதிவிட்டு வந்தபடியால் பேஸ்புக் நிறுவனம் அவரின் கணக்கை முடித்துக்கொள்ளுமாறு பல தடவைகள் அவரிடம் கோரியதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார்.

அதற்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் அவரிடம் இறுதியாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி இலங்கை அவசர கணணி பிரதிபளிப்பு பிரிவு தலையிட்டு கூட்டு வேண்டுகோள் ஒன்றை விடுத்தாகவும், அதன் பின்னர் இரண்டு நாட்கள் கடந்து சஹ்ரான் தனது பேஸ்புக் கணக்கை நிறுத்தி வைத்தாகவும் சாட்சியாளர் கூறினார்.