இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.
வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.
அதனை மேற்கோள் காண்பித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டிருக்கிறது.
சீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.
சீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.
எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.