கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை குறித்து சுகாதார தொழிற்சங்கங்கள் கவலை எழுப்பியிருந்தபோதிலும், எந்தவொரு சமூக பரவலும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கடந்த வாரம் விடுமுறையில் இருந்த ஒரு இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சமூக தொற்று குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர இலங்கையில் தற்போதுவரை எந்த சமூக தொற்று நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என உறுதியளித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான இராணுவ அதிகாரி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த இராணுவ அதிகாரி விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது குவைத்திலிருந்து திரும்பி வந்த ஒரு குழுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது இதனை அடுத்தே வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, குறித்த இராணுவ சிப்பாய் ஹொரானவில் வசிப்பவர் என்றும், அவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சுயமாகத் தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
அந்தவகையில் குறித்த இராணுவ சிப்பாயுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்புகள் இருந்ததாக நம்பப்படும் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.