மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர தூது : ‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஆதரவு பிரசாரம்

380 0

tamil_news_large_1652378_318_219மீண்டும், அ.தி.மு.க.,வில் சேரும் முயற்சியில், ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா இறங்கியுள்ளதாக தெரிகிறது. நான்கு தொகுதி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கும்படி, அவர், ‘வாட்ஸ் ஆப்’ வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக, ராஜ்யசபாவில் பகிரங்க புகார் கூறி, சசிகலா புஷ்பா பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் காரணமாக, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னும், அ.தி.மு.க., தலைமை பற்றியும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினர் பற்றியும், புகார் கூறி வந்தார்.

பழிவாங்க முயற்சி : இந்நிலையில், ‘வாட்ஸ் ஆப்’பில் சசிகலா புஷ்பா பேசியுள்ள விபரம்: முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு களங்கமும், ஆபத்தும் விளைவிக்க, ஒரு கும்பல் சதி செய்ததை, அ.தி.மு.க., – எம்.பி., என்ற முறையில் முறியடித்தேன். எதிர்பாராத அதிர்ச்சியாக, தங்களது கனவு தகர்த்தெறியப்பட்டதால், அந்த கும்பல், என்னை பழி வாங்க, பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. எத்தகைய மிரட்டலுக்கும் அஞ்சாமல், விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அதை முறியடிப்பேன்.அரசியல் சட்டப்படி, முதல்வர் பதவிக்கு எந்தவித பிரச்னையும் வராமல் பாதுகாத்து, மக்கள் உணர்வுக்கு மதிப்பும், நட்புக்கு மரியாதையும் காட்டிய, பிரதமர் மோடிக்கு, தொண்டர்களின் சார்பில் என் நன்றி.
தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதற்கிடையில், தலைமைச் செயலர் ராம்மோகன் ராவ், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், செயலர், கே.என்.வெங்கட்ரமணன் ஆகிய மூவருக்கும், அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு, அந்த தகவல்கள் அனைத்தையும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என, குறிப்பிட்டு உள்ளார்.
முட்டுக்கட்டை : இது குறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அவரை துாண்டி விட்டு, இயங்க வைத்தவர்கள் மற்றும், தி.மு.க., – எம்.பி., கனிமொழி ஆகியோர் உதவியுடன், தி.மு.க.,வில் சேர சசிகலா புஷ்பா முயன்றார். அதற்கு, ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு விட்டார்.இதையடுத்து, காங்., – பா.ஜ.,வில் சேருவதற்காக, சில தலைவர்களை சந்தித்து பேசினார்.

டில்லியில் உள்ளவர்களையும், தமிழக தலைவர்களையும் ரகசியமாக சந்தித்தார். எங்கும் கதவு திறக்காததால், மீண்டும், அ.தி.மு.க.,வுக்கே திரும்ப திட்டமிடுகிறார்; அது நடக்காது. அவரை, ஜெயலலிதா மன்னிக்கவே மாட்டார்.இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.