ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் புலிகளை துல்லியமாக கணக்கெடுக்க இரவில் செயல்படக்கூடிய நவீன கேமிரா பொருத்தும் பணி தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு குறிப்பாக புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
அதில் புலிகளின் எண்ணிக்கை மட்டும் தனியாக கேமராக்கள் பொருத்தி துல்லியமாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதில் புலிகள் எந்தெந்த பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த ஆண்டு வைத்த கேமராக்களில் எந்த இடங்களில் புலிகள் அதிக அளவு பதிவானது என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இந்த ஆண்டும் குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்வு செய்து அங்கு கேமராக்களை பொருத்த வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக இரவிலும் துல்லியமாக புலிகளின் நடமாட்டத்தை கண்டறிய சுமார் 300 கேமராக்கள் வரவழைக்கப்பட்டு 150 இடங்களில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சி பகுதியிலும், மிகவும் அடர்த்தியான பகுதியிலும், குறிப்பிட்ட சில இடங்களிலும் புலிகள் நடமாடும் பகுதியிலும் கடந்த 2 நாட்களாக கேமரா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்கள் சுமார் 45 நாட்கள் வரை வனப்பகுதியில் வைக்கப்பட்டு புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும். அப்போது கேமரா இருக்கும் பகுதியில் சிறிய வண்டு பறந்தால் கூட துல்லியமாக இரவு நேரத்தில் அந்த காட்சிகளை பதிவு செய்து விடும்.
மேலும் மரங்களின் கீழ்பகுதியில் கேமராக்கள் வைக்க பட்டுள்ளதால் யானை உட்பட வன விலங்குகளால் எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்பதை கண்காணிக்க 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வனத்துறையினர் சுழற்சி அடிப்படையில் கேமராவை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது புலிகளை கணக்கெடுப்பதற்காக கேமரா பொருத்தும் பணி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மதுரை மாவட்டம் சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது.