ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக புகார்- இருசக்கர வாகனத்தில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர்

280 0

பெத்தானியபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக வந்த புகாரில் கடைக்கு நேரில் சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ நடவடிக்கை எடுத்தார்.

மதுரை மாவட்டம் பெத்தானியபுரத்தில் நலத்திட்ட உதவிகள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது, அமைச்சரிடம் ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். உடனே அமைச்சர் செல்லூர் ராஜூ இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேசன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் அரிசி குறைவாக வழங்கியது தொடர்பாக கடையில் இருந்த பெரியசாமி என்பவரை கைது செய்யவும், மேலும் விற்பனையாளர் தாமோதரனை பணியிடை நீக்கம் செய்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ நடவடிக்கை மேற்கொண்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.