இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இந்து ஒற்றுமை மையம் தெரிவித்துள்ளது.
இந்து ஒற்றுமை மையம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வக்கீல் ஜி.கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ். ஊடக ஒருங்கிணைப்பாளர் (தமிழ்நாடு) நா.சடகோபன் ஆகியோர் கலந்து கொண்டனர். வக்கீல் ஜி.கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பயங்கரவாதிகளால் இந்து இயக்க சகோதரர்கள் இதுவரை 230 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
தமிழகத்தில் பயங்கரவாதம், தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஆதரமாக சி.டி. ஒன்றை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.இந்துக்களின் அடிப்படை உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுகிறது. இந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கேட்டாலும் மறுக்கப்படுகிறது.
இதுபோன்ற செயல்களை கண்டித்தும், இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் இந்து இயக்கங்கள், அமைப்புகள் மட்டுமல்லாது ஆன்மிக கலாசார அமைப்புகள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.