உலகமே எதிர்பார்க்கும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்!

301 0

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பரிசோதனையில் வைத்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு உலகெங்கிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்கிய வல்லுநர் குழுவின் ஒரு அங்கமாக இந்தியாவைச் சேர்ந்த சந்திரபாலி தத்தா என்பவர் இருந்துள்ளார்.

கொல்கத்தாவில் பிறந்த சந்திரபாலி தத்தா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தில் மருத்துவ உயிரி உற்பத்தி நிலையத்தில் பணிபுரிகிறார். கொரோனா வைரஸை தடுக்கும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் இங்கு தான் நடத்தப்படுகின்றன. இதில் தர உறுதி மேலாளராக உள்ள சந்திரபாலி, தடுப்பூசியை சோதனை நிலைக்கு அனுப்புவதற்கு முன் அனைத்து கட்டங்களிலும் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கொல்கத்தாவில் பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி படித்த சந்திரபாலி, உயிரியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டவர். ஆனால் கல்லூரி படிப்பு முடித்த பின் கணினி அறிவியலைப் படித்து, அசென்சர் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றியுள்ளார். அவரது குழந்தை பருவ நண்பர் ஒருவர் நாட்டிங்ஹாமில் படிப்பதை அறிந்து, இவரும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பயோடெக் படிப்பில் சேர்ந்துள்ளார். வீட்டிற்கு ஒரே குழந்தையான இவர் வெளிநாடு சென்று படிப்பதை அவர் அம்மா விரும்பவில்லை. அவரது தந்தை அளித்த ஊக்கத்தால் தனது கனவை அடைந்துள்ளார்.

படிக்கும் போது தனது தேவைக்கான பணத்தை பீட்சா மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேர வேலை பார்த்து சமாளித்துள்ளார். பின்னர் மிகப்பெரிய பார்மா நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித் க்லைனின் ஆர் & டி பிரிவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்துள்ளார். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் விரைவாக முன்னேறி ஓராண்டுக்கு முன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பணியில் சேர்ந்தவர், தற்போது உலகளவில் பேசப்படும் தடுப்பூசி திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளார்.

தனது பணி குறித்து சந்திரபாலி கூறியதாவது: இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு மனிதாபிமான காரணம் போன்றது. எங்கள் அமைப்பு லாப நோக்கற்றது. இந்த தடுப்பூசியை வெற்றிகரமாகச் உருவாக்க தினமும் கூடுதல் நேரங்களை செலவிடுகிறோம், இதன் மூலம் மனித உயிர்களை காப்பாற்ற முடியும். இது ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி, எல்லோரும் அதன் வெற்றியை நோக்கி முழு நேரமும் பணியாற்றியுள்ளனர்.

latest tamil news

 

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இத்திட்டத்தில், எல்லாம் இணக்கமாக இருக்கிறதா, தரமான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, தவறுகள் ஏதும் இல்லை போன்றவற்றை உறுதிப்படுத்துவது என்னுடைய பணி ஆகும். இத்தடுப்பூசி அடுத்த கட்டத்தில் செயல்படும் என்று நம்புகிறோம். இத்தடுப்பூசியை உலகம் முழுவதும் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.