மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்

321 0

மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) உத்தரவிட்டார்.

கடந்த வியாழக்கிழமை மாலை வாகனேரி குளத்துமடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வகுளாவலை சந்தியில் பொதுமக்கள் வழிமறிந்து உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்த மண்ணை பறிமுதல் செய்ய சென்ற வேளை பொதுமக்களுக்கும் உழவு இயந்திரத்தில் மண் ஏற்றி வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் உழவு இயந்திரத்தில் வந்தவர்களாலும் மேலும் சிலர் ஒன்றிணைந்து பொதுமக்கள் மீது தாக்குல் மேற்கொண்டனர்.

இதில் 11 பேர் காயமடைந்ததுடன் இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் இராணுவத்தினர் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், எஸ்.யோகேஸ்வரன், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை மேற் கொண்டு தலை மறைவாகியிருந்த 9 பேர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (31) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 11 திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை வாகனேரி பகுதியில் ஓட்டமாவடி காவத்த முனையை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக பிரதேச மக்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளதுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .