மீண்டும் மகிந்த ஆட்சி? சீனாவின் பிடிக்குள் இலங்கை!-ஊடகங்கள் கருத்து

274 0

mahinda_rajapaksa-1இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக மேற்கத்தேய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது, இந்தியாவை புறந்தள்ளி சீனாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டுவந்தது.

சீனாவின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்திருந்தது.

குறிப்பாக, அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் உட்பட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள், கொழும்பு போர்ட் சிட்டி அமைப்பதற்கும் சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் இந்த செயற்பாடுகளால் அதிர்ச்சியடைந்த இந்தியாவும், மேற்கத்தேய நாடுகளும் அவரின் ஆட்சியை அகற்றி, இன்றைய அரசாங்கத்தை அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

2015ம் ஆண்டு தை மாதம் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றதன் பின்னர், ஓரளவிற்கு சீனாவின் செல்வாக்கு குறைந்திருந்தது.

ஆனால். இந்தாண்டின் ஆரம்பித்தில் இருந்து சீனாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்திருப்பதனை உணரமுடிகின்றது.

இந்நிலையில், சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு- தெற்கு ஒத்துழைப்புக்கான சீன பேரவையின் பிரதி பணிப்பாளர் ஷியாவோ லிம்மின் ஒருங்கிணைப்பில், 12 சீன முதலீட்டாளர்கள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் தெற்குப் பகுதிகளில் தங்களின் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இயற்கை எரிவாயு மின்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் தங்களின் கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

இதேவேளை வடக்கு கிழக்கில் தங்களது முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்தாலோசனை நடத்தியுள்ள குறித்த குழு, இலங்கையின் அமைச்சர்கள் பலருடனும் பல்வேறு மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கின்றன.

முன்னதாக, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் மீண்டும் இடம்பெறாதிருப்பதை ஜனாதிபதியும், பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரியையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் நேரில் தான் சந்தித்த போதே இது குறித்து நேரடியாக அவர்களிடம் தனது கருத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

மகிந்தவிற்குப் பின்னர் வந்த மைத்திரி, ரணில் அரசின் செயற்பாடுகளால் சீனா அரசாங்கம் இலங்கையில் மேற்கொண்ட அபிவிருத்தி, முதலீட்டுச் செயற்பாடுகளில் ஏற்பட்ட தடைகளால் சீன அரசாங்கம் பெரும் அதிருப்தியில் இருந்தது.

இதன் வெளிப்பாடு தான் சீனத் தூதுவரின் இந்த வலியுறுத்தலுக்கு காரணமாக இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

மேலும், சீனத்தூதுவர் தன்னுடைய வலியுறுத்தலில் குறிப்பிட்டதாவது, துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் இரண்டு நாடுகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. இது போல மீண்டும் இடம்பெறக் கூடாது.

சட்டரீதியான உடன்பாடுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பொருளாதார உடன்பாடுகள் குறித்த கொள்கைகளில் மாற்றம் ஏற்படக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.

அவரின் இந்த அதிருப்தியான பேச்சுக்கு இலங்கை அரசாங்கம் செவி சாய்த்திருப்பதாகவே தோன்றுகின்றது.

இதற்கிடையில், சீனாவிற்கான பயணத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த மாதம் 23ம் திகதி மேற்கொள்கின்றார்.

சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பெயரில் செல்லும் அவர், டிசம்பர் 1ம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மகிந்தவின் சீனாப் பயணத்திற்கான தேவைகளை இலங்கை அரசாங்கமே மேற்கொள்வதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய இலங்கை அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் தொடர்பை பேண சீனா விரும்புகிறது.

அதற்காக சீனா, தன்னுடைய இலங்கையின் பார்வையை மீள் உருவாக்கம் செய்திருக்கிறது.