வாழை, எருக்கஞ்செடிகளை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் வகையை சேர்ந்ததாக இருக்குமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் வட மாநிலங்களான மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் விவசாய பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆந்திரா- கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேரலகிரி ஊராட்சியில் வாழை மரங்கள், எருக்கஞ்செடிகள், ஆமணக்கு செடிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அமர்ந்திருந்தன.
இந்த வெட்டுக்கிளிகள் இருந்த செடிகளில் இலைகள் இல்லாமல் மொட்டையாக காட்சி அளித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இன்று காலை அந்த பகுதிக்கு சென்ற வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த வெட்டுக்கிளிகளின் நிறத்தை பார்க்கும்போது வடமாநிலங்களில் இருந்து வந்தது போன்றுதான் தெரிகிறது. இருந்தாலும் உடனடியாக உறுதிப்படுத்த முடியாததால் இன்று அந்த வெட்டுக்கிளிகளை பிடித்து பெங்களூருவில் உள்ள வேளாண் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பிறகு தான் வெளிநாடுகளில் இருந்து வந்தவையா? என்பதை உறுதி செய்து அதை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினர்.
எங்கள் பகுதியில் இதுபோன்ற வெட்டுக்கிளிகளை நாங்கள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. திடீரென கூட்டம் கூட்டமாக செடிகளில் வெட்டுக்கிளிகள் அமர்ந்திருந்தன. அந்த செடிகளில் இலைகள் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளோம். இதனால் இந்த வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் வகையை சேர்ந்ததாக இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே யானைகள், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வெட்டுக்கிளிகளும் வந்துள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.