காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், குறிப்பிட்ட அளவான மக்கள் ஒன்றுகூடுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவது வயதில் கடந்த 26ஆம் திகதி காலமானார்.
திடீர் உடல்நலக் குறைவினால் கொழும்பு – தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரின் பூதவுடல் பிரேத பரிசோதனைகளின் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரது குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் புதன்கிழமை முற்பகல் 11 மணி வரை பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இராஜகிரிய இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன், மறுநாள் காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்பட்டது.
அங்கு தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல், அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதன்பின்னர் அங்கிருந்து றம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, மீண்டும் பூதவுடல் கொட்டக்கலை சீ.எல்.எஃப் மண்டபத்தில் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெருந்திரளான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் தொழிற்சங்கவாதிகளும் அமைச்சரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் மலையகத்திலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும், துயர் பகிர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
மலையகத்தின் பிரதான நகரங்கள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வீடுகளிலும் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு பொதுமக்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.