நாடாளுமன்றை மீளக்கூட்டி, நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மக்களை திசைத்திருப்பும் கருத்துக்களைத்தான் சிறிலங்கா அரசாங்கம் தற்போது முன்வைத்து வருகிறது என குற்றம் சாட்டினார்.
உண்மையில்,சிறிலங்கா அரசாங்கம் இவ்வேளையில் ஸ்திரமான கொள்கையொன்றுடன் பயணிக்க வேண்டும் என்றும் அப்போது மட்டும்தான் இந்த சவாலை வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியுமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார மீட்சி. மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்துவது என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவித்த சஜித் பிரேமதாச இதனை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறினார்.
எனவே, இவ்வாறானதொரு காலத்தில் மக்களுக்கு பொய்யான தகவல்களை வெளியிடாமல், உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவே இருப்பதாக தெரிவித்த சஜித் பிரேமதாச இதற்காக நாடாளுமன்றை மீளக் கூட்டி, இந்த நாட்டை முன்னேற்றும் செயற்றிட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க தயார் என்றும் கூறினார்.
எனவே, உடனடியாக நாடாளுமன்றைக் கூட்டி, இதற்கான நடவடிக்கைiயினை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.