கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்

371 0

இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருந்தோம்.

எனினும் இது தொடர்பில் ராஜபக்ஷ அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் எமது மக்களை சொல்லணா துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றது.

இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு இராணுவ சோதனைச்சாவடிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இராணுவ நடமாட்டமும் வடக்கில் தலைதூக்கியுள்ளது. இது எமது மக்களை அச்சத்திற்குள்ளும் யுத்த மனோபாவத்திற்குள்ளும் வைத்திருப்பதற்காகவா என எண்ணத்தோன்றுகின்றது.

தற்போது கொரோனா தொற்றை காரணம் காட்டி வடக்கில் மேலும் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படவேண்டிய சிவில் நிர்வாக செயற்பாடுகளை இராணுவத்திற்கு வழங்கி வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கவே இந்த அரசு முற்படுவதாக தோன்றுகின்ற அதேவேளை இலங்கை முகம்கொடுக்கவுள்ள தேர்தலில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருந்து தென்னிலங்கையில் தம்மை ஒரு வீரனாக காட்டவே இந்த ஜனாதிபதியும் பிரதமரும் எண்ணுகின்றனர்.

தமிழர்களை தொடர்ச்சியாக அடக்குவதனால் தமது வெற்றியை இலகுவாக்கலாம் என எண்ணக்கோட்டை காட்டும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை எதிர்வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பது திண்ணம்.

இராணுவ பிரசன்னம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு அமையவே காணப்பட வேண்டும். எனினும் சர்வதேச ஒழுக்க நெறியை மீறி செயற்படும் இந்த அரசு தமிழ் மக்களை அடக்கி சாதிக்க நினைப்பவைகளை ஈடேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்றும் தடையாகவே இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.