சமூக இடைவெளியைப் பேணும் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்; கண்டுபிடித்து மாணவன் சாதனை

297 0

கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியைப் பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நவீன ஸ்மாட் தொழில் நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்- கல்முனை கல்வி வலயத்தில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவின் தொழில்நுட்பத் துறையில் கல்விகற்று வரும் எம்.எம்.சனோஜ் அகமட் என்ற மாணவன் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை தமக்கிடையே மக்கள் பேணிக் கொள்வதற்கு இந்த சாதனம் பெரிதும் உதவுகிறது.

அத்துடன் சமூக இடைவெளி மீறப்படும்போது ஒலியெழுப்பி கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் இரவு வேளைகளில் ஒளி எழுப்பி சமிஞ்சை செய்யும் வகையில் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தையில் கிடைத்த ஒரு சில உபகரணங்களைக் கொண்டு இந்த கழுத்துப்பட்டி தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நவீனத் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி கைக்கடிகாரம், அலுவலக அடையாள அட்டை, தலைக்கவசம், போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களிலும் செயற்படுத்த முடியும் .