மலையக அரசியல் என்பது பெருந்தொகையான இந்தியத் தழிழர்களை அடிப்படையாகக் கொண்டது. சுமார் 15 லட்சம் மக்கள் வாழும் ஒரு சமூகத்தின் அரசியலை சாதாரணமாக நோக்க முடியாது – அச்சமூகத்தின் எழுச்சியில் மற்றும் நிலைமாற்றத்தில் அரசியல் – தொழிற் சங்கங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இதனை விமர்சனங்களுக்கு அப்பால் நின்று ஆராய வேண்டும். அந்தவகையில் இக்கட்டுரை மலையக அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வகிபங்கு, ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் எதிர்காலம் தொடர்பாக சில அவதானிப்புகளை முன்வைக்க முற்படுகின்றது.
1939ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – இந்தியக் காங்கிரஸ் மலையக அரசியலின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க) எனப் பெயர் மாற்றம் பெற்று அதன் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு பலமான இனத்துவ, பிரதேச கட்சியாக உருமாறியது. அத்துடன், தேசிய, சர்வதேச ரீதியாகவும் இக்கட்சியின் நாமம் பல்வேறு விடயங்களில் நிலைநாட்டப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சங்க அமைப்பாகவும் இலங்கையின் தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறியது.
1978ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல்முறை பொதுவில் சிறுபான்மை கட்சிகளின் செல்வாக்கினை தேசிய அரசியலில் அதிகரித்தன. தேசியக் கட்சிகள் தெளிவான பெரும்பான்மையினை பெறமுடியாத நிலை ஏற்பட்டப்போது, சிறுபான்மை, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசாங்கத்தினை அமைத்தன. 1988க்குப் பின்னர் இந்தப் போக்கினை தெளிவாக அவதானிக்க முடியும். இச்சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திய சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களின் பிரதான பிரச்சினையாகக் காணப்பட்ட குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வினை தேடினார். 1948-1978 வரையிலான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காலங்களில் கூட இ.தொ.க. மலையக மக்களின் மேம்பாட்டக்காக அரசாங்கத்துக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து அச்சமூகத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்க முன்நின்றது.
1978ம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நுவரெலிய –மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் இருந்து 35,843 வாக்குகளைப் பெற்று சௌமியமூர்த்தி தொண்டமான்; பாராளுமன்றத்துக்குத் தெரிவாகினார். 1978ம் ஆண்டு அரசாங்கத்தில் இணைந்து முதல் தடவையாக அமைச்சுப் பதவியையும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக மாறி மாறி பதவிக்கு வந்த எல்லா அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவியை இ.தொ.க கொண்டிருந்தது (2015 தொடக்கம் -2019 நவம்பர் வரை அரசாங்கத்தில் இணையவில்லை). இக்காலக்கட்டத்தில் மலையக சமூகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியது. பிரஜாவுரிமை, வேதனம், கல்வி, சுகாதாரம், வீடு, உட்கட்டமைப்பு, அரச தொழில் வாய்ப்பு என பட்டியல்படுத்தலாம்.
இன்று மலையக சமூகத்தில் சுமார் 13000 அசிரியர்கள் காணப்படுகின்றனர். இதற்கு பிரதான காரணம் இ.தொ.க ஆகும். சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் வாகிபாகம் அளப்பெரியது. மலையக அரசியலிள் மாத்திரம் நின்றுவிடாது, தேசிய அரசியலிலும் துடிப்புடன் காணப்பட்ட ஒரு தலைவராவார். பொதுவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தேசிய அரசியலிள் ஈடுபாடு காட்டுவது குறைவாகும். காரணம், அக்கட்சிகள் தமது சமூக நலன்சார்ந்து செயற்படுவதும் அதற்கான குறுகிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதுமாகும். ஆனால், அதற்கு விதிவிலக்காக காணப்பட்டார் தொண்டமான்.
1972ம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் மற்றும் சமஷ்டிக் கட்சி ஆகியன தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியப்போது அதில் இ.தொ.க இணைந்துக்கொண்டதுடன், அதன் உப தலைவர்களில் ஒருவராகவும் தொண்டமான் செயற்பட்டார். ஆயினும், அது தொடரவில்லை. ஜே.ஆர். ஜெயவர்தன இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தமிழ் தரப்புகளுடன் மேற்கொள்ள தொடண்டமானை ஒரு பிரதிநிதியாகப் பயன்படுத்தினார். தென்னிலங்கை தலைவர்கள் மாத்திரமன்றி தமிழ் தலைவர்களும் இவர் மீது பெரும் மரியாதைக் கொண்டிருந்தனர். 1980களின் பின்னர் தேசிய அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்தது மாத்திரமன்றி, சிங்களத் தலைவர்களைத் தமது கோரிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் செவிமடுக்கும் ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கினார்.
இலங்கை அரசியல் எப்போதும் உயர் குழாமின் (மேட்டுக்குடி) ஆதிக்கத்துக்கு உட்பட்டது. குடும்பப் பின்னணி, அரசியல் பின்னணி, அரசியல் அனுபவம், சமூக வகுப்பு, செல்வம் மற்றும் சாதிப் போன்ற பல காரணிகள் பெரிதும் செல்வாக்கு செழுத்துகின்றன. இதனை எவரும் மறுதலிக்க முடியாது. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இலங்கை அரசியலின் நிரந்தரமான பண்பு இதுவாகும். அந்தவரிசையில் இ.தொ.க மற்றும் அதன் தலைவர்களும் இடம்பெறுவர் -– நிலமானிய இல்லது நிலபிரபுத்துவ சமூக பின்புலம் இக்கட்சியின் செல்வாக்கினை, தேசிய அங்கிகாரத்தினை மற்றும் பெறுமானத்தினை மேலோங்கச் செய்தது. அமரர் ஆறுமுகன் அவர்கள் இதற்கு விதிவிளக்கல்ல. சிங்களத் தலைவர்கள் மத்தியில் இ.தொ.க தொடர்பாக பெரும் மரியாதையொன்று தொடரந்தும் நிலைப்பதற்கு பரம்பரைப் பின்னணி முக்கிய காரணமாகும் – இதனை ஏனைய கட்சிகளின் நிலையுடன் ஒப்பிடும் போது அவதானிக்க முடியும். அரசாங்கத்தினையும், அரச நிறுவனங்களையும் மற்றும் சமூக நிறுவனங்கள் மீதும் பெறும் ஆதிக்கத்தினைச் செழுத்தும் நிலையினை தொடர்ந்தும் இக்கட்சிக் கொண்டிருந்தது.
பிரிதொரு அம்சம் யாதெனில், இந்திய அரசாங்கத்துடனான நீண்டகால உறவாகும். இந்தியப்பூர்வீகம் மற்றும் பரம்பரைப் பின்னணி என்பன இந்திய தூதரகம் உட்பட இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியது. இலங்கை – இந்திய உறவில் நெரிசல் ஏற்படும்போது இ.தொ.கவின் தலையீட்டினை இலங்கை அரசாங்கம் நாடும் நிலைக்காணப்பட்டது. இந்திய உறவு, இந்தியப் பூர்வீகம் என்பன இ.தொ.கா மீதான சிங்களத் தலைவர்களின் அங்கிகாரத்தினை அதிகரித்தது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இயலுமையினை பெற்றுக்கொண்டது. இலங்கை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் இ.தொ.க தலைமைகளைத் தமது இந்திய உறவினை சக்திப்படுத்த பிரதிநிதிகளாகப் பயன்படுத்தியுள்ளன. மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டப் பின்னர் மேற்கொண்ட முதலாவது இந்திய விஜயத்தில் ஆறுமுகனும் இணைந்துக் கொண்டமை குறிப்பிடதக்கதாகும். இது ஒரு உதாரணம் மாத்திரமே ஆகும்.
பெரிய தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் ஆறுமுகனும் அதனைப் பேணி வந்தார். மோடியின் மலையக வருகை, இ.தொ காவுடனான சந்திப்பு, மலையக அபிவிருத்திக்குத் தொடரச்சியான இந்திய உதவிகள் இவ்வுறவின் வெளிப்பாடுகளாகும்.
1999ம் ஆண்டு பெரிய தொண்டமான் மறைந்த பின்னர் இக்கட்சியின் எதிர்காலம் குறித்து பெரிதும் சந்தேகம் ஏற்பட்டது. காரணம் இரண்டாம் தலைமைத்துவத்தினை அவர் உருவாக்கவில்லை. இது பொதுவில் மலையகக் கட்சிகளிடம் காணப்படும் பிரச்சினையாகும். 2010ம் ஆண்டு சந்திரசேகரன் மறைந்த பின்னர் அதேநிலைமையினை மலையக மக்கள் முன்னணியில் அவதானித்தோம். தொண்டமானின் மறைவு 2001ம் ஆண்டு தேர்தலிள் பிரதிபலித்தது. இ.தொ.க. வெறுமனே இரண்டு ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது. ஆறுமுகம் அவர்களின் தலைமைத்துவம் தொடர்பாக சிரேஸ்ட கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தார்கள். கட்சிப் பிளவுகள் மிக வேகமாக இடம்பெற்றன. அவரை சர்வாதிகார போக்குடையவர் என்று விமர்சித்ததார்கள். ஒரு விசித்திரமான தலைமைத்துவப் பாணியைக் கொண்டிருந்தார். இதன் விளைவாக மூத்த உறுப்பினர்களான பி.பி. தேவராஜ், யோகராஜன், சென்னன், சச்சிதாநந்தன், புத்திரசிகாமணி, சதாசிவம், ராஜரட்னம், வடிவேல் சுரேஸ், ராதாகிருஸ்ணன் எனப் பலரும் கட்சியைவிட்டு பிரிந்தனர்.
ஆனால் ஆறுமுகம் தொண்டமான் தளர்வடையவில்லை. உறுதியுடன் தொடர்ந்தும் செயற்பட்டார். ஆறுமுகன் இ.தொ.காவின் தலைமைத்துவத்தினை ஏற்றப் பின்னர், பிரிந்து சென்றவர்கள் பலர் புதிய தொழிற் சங்கங்களையும் கட்சிகளையும் உருவாகினர். அதன் காரணமாக, இ.தொ.காவின் வாக்கு வங்கி மற்றும் தொழிற் சங்க பலம் என்பன சற்று வீழ்ச்சியடைந்தன. ஆயினும் 2004ம் ஆண்டு தேர்தலில் இ.தொ.கா அமோக வெற்றியைப் பெற்றுக்கொண்டதுடன், அதன் செல்வாக்கினை மீள நிறுவியது. மொத்தமாக 8 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன், ஆறுமுகன் கெபினட் அமைச்சராகவும் ஏனைய ஏழூ பேரும் பிரதியமைச்சர்களாகவும் காணப்பட்டனர். பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களிளும் இ.தொ.க தனது பலத்தை நிறுவியது.
கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலிள் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு ஆசனங்களை இ.தொ. கா பெற்றுக்கொண்டது. இதன் செல்வாக்கு கண்டி, பதுளை, மாத்தளை, இரத்தினப்புரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிளும் உண்டு. இந்த அனைத்து மாவட்டங்களிலும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள். இ.தொ.க என்ற தாபனம் மலையக மக்களின் வாழ்வில் பெறும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆரம்பகால தலைமைத்துவம், சௌமியமூர்த்தி தொண்டமானின் அர்ப்பணிப்பு என்பன மக்கள் மனங்களில் நீங்காத இடத்தினை ஏற்படுத்தியுள்ளது. சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் முதல் தடவையாக மலையக மக்களுக்கென தோட்ட உட்க்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டமை மிக முக்கியமான நகர்வாகும்.
பொதுவில் மலையக கட்சிகள் தனி நபர் கட்சிகள் அல்லது செல்வாக்கு மிக்க ஆளுமைகளின் கட்சிகளாகவே காணப்படுகின்றன. இங்கு உள்ளக –கட்சி ஜனநாயகத்தினையோ அல்லது கட்சிகளுக்கிடையிலான ஜனநாயகத்தினையோ காண முடியாது. இந்த விமர்சனங்கள் இ.தொ.கவுக்கும் பொருந்தும். ஆயினும் மலையக சமூகத்தின் எழுச்சிக்கும் ஒரு கௌரவமான சமூகமாக வாழும் சூழ்நிலையினை உருவாகுவதிலும் இக்கட்சி முக்கிய பங்காற்றியுள்ளது.
2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் இ.தொ.கவுக்கு பெரும் சவாலாக அமைந்தது. முதல் தடவையாக ஒரு புதியக் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலிள் களமிறங்கியது – அதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். இக்கூட்டணி 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிள் மைத்திரிப்பால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளித்தது. இக்கூட்டணியின் தீவிர எழுச்சி இ.தொ.காவினை தொடர்ந்தும் சவாலுக்குட்படுத்தியது. 2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஒரே தடவையில் 6 ஆசனங்களை கைப்பற்றியது கூட்டணி. இ.தொ.க இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனை இ.தொ.கா.வின். வீழ்ச்சி எனவும், அதற்கு ஆறுமுகனின் தலைமைத்துவமே காரணமெனவும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆயினும் 2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் மலையகத்தின் பல இடங்களில் சபைகளை கைப்பற்றி மீண்டும் தமது பலத்தை நிறுபித்தது இ.தொ.கா.
இங்கு அவதானிக்க வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில், 2015ம் ஆண்டுக்குப் பின்னர் மலையக அரசியலின் தளம் விரிவடைந்தமையாகும். குறிப்பாக இரு அதிகார முகாம்கள் தோற்றம் பெற்றன. ஒன்று நிலமானியப் பண்புகளைக் கொண்ட, குடும்ப மற்றும் பரம்பரை மேலாதிக்கத்தினைக் தழுவிய மரபு ரீதியான அரசியல் – இ.தொ.க. பிரதொன்று அண்மைக்காலமாக எழுச்சிப்பெற்று வரும் புதிய அரசியல் தலைமைத்துவம் (த.மு.கூ). இதில் இ.தொ.காவில் இருந்து பிரிந்து வந்த பலரும் காணப்படுகின்றனர். இதன் காரணமாக மலையக மக்களின் வாக்கு வங்கி – அல்லது ஆதரவு தளம் 2015க்குப் பின்னர் இ.தொ.க மற்றும் த.மு.கூ என்ற அடிப்படையில் அணித்திரட்டப்பட்டது.
இதனை ஒரு ஆரோக்கியமாக சூழலாக அவதானிக்க முடிந்தது. வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை தடுக்கப்பட்டு, இந்த இரண்டு முகாம்களுக்குள் அவை அணித்திரட்டப்பட்டன. இந்தப் போக்கினை நுவரெலியா மற்றும் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவில் காண முடிந்தது. மலையகத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி அரசியல் உருவாகியது. மலையக மக்கள் மத்தியில் ஒரு போதும் இல்லாத இன உணர்வு தேர்தல் காலங்களில் வெளிப்பட்டது. அதன் காரணமாக சகல அரசியல் நிறுவனங்களிலும் பிரதிநிதித்துவம் இரு முகாமகளுக்கும் கணிசமாக அதிகரித்தது. இதனை 2018ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலிள் நாம் தெளிவாக அவதானித்தோம்.
புதிய அரசியல் முகாம் இ.தொ. காவில் இருந்து விடுபட்ட வகையிலான புதிய மாற்றங்களை மலையத்தில் எற்படுத்த முற்பட்டது – அதில் பகுதியளலவில் அவர்கள் வெற்றிக்கண்டார்கள் – அதில் பிரதேச சபைச் சட்ட திருத்தம், மலையக அபிவிருத்தி அதிகார சபை, வீட்டுத்திட்டம், காணியுரிமை வழங்குதல், பிரதேச சபைகளின் உருவாக்கம் மற்றும் ஐந்தாண்டு திட்டத்தின் அமுலாக்ககம் என்பவற்றினை குறிப்பிடலாம். இவை கடந்த சில ஆண்டுகளில் ஆறுமுகனின் தலைமத்துவத்தில மாற்றங்களை கொண்டு வருவதற்கு உந்து சக்தியாக அமைந்தன –விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்களை தழுவிக்கொள்ள நேரிட்டது.
புதிய கூட்டணியுடன் போட்டியிடும் வகையில், மீளவும் இ.தொ.காவின் ஆதிக்கத்தினை நிலைநாட்டும் நோக்கில் கட்சியில் பல மாற்றங்களை செய்தார். ஜனநாயகத் தீர்மானங்களை எடுக்க தலைப்பட்டார். மேலும், இச்சமூகததின் பிரச்சினைகள் தொடர்பாக கற்ற சமூகத்துடனும் ஏனையோருடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டார். தமது தலைமைத்துவ பாணியில் மாற்றங்களை ஏற்படுத்தினார். மக்கள் பிரச்சினைகளில் அதிக ஆர்வத்தினைக் காட்டினார். மக்கள் மயப்பட்ட அரசியலுக்கு அன்மைக்காலமாக தன்னை தயார் செய்தார். இதனை அண்மைக்கால செயற்பாடுகள் வெளிப்படுத்தின. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியதுடன் அதனூடாகத் தனது பலத்தையும் நிரூபித்தார். அதற்கு அவர் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் (கொட்டகலையில்) நல்ல சான்றாக அமைந்தது. மறுபுறமாக த.மு கூட்டணியின் தலவாக்கலை தேர்தல் பிரசாரம் அதன் பலத்தினை வெளிப்படுத்தியது.
இவை சிங்களத் தலைவர்களுக்கு மலையக அரசியலின் மாறிவரும் பாங்கினை எடுத்துக்காட்டியது. மாத்திரமன்றி, மலையக மக்கள் இரு பிரதான கட்சிகளின் அல்லது முகாமகளின் கீழ் ஒழுங்கமைக்ப்பட்டிருப்பதனை வெளிக்காட்டியது. இதன் மூலம் ஒரு முக்கிய செய்தி சிங்கள தலைவர்களுக்க புலப்பட்டது – மலையக மக்கள் தொடர்பான தீர்மானங்களில் இவ்விரு முகாம்களும் ஆதிக்கம் செழுத்தும் என்பதும் அவற்றை முற்றாக புறந்தள்ளி செயற்பட முடியாது என்பதுமாகும்.
ஆறுமுகனை மலையக மக்கள் ஆபத்தில் காக்கும் தலைவனாக பார்க்கின்றார்கள். இம்மக்களுக்கு ஆபத்து, அச்சுறுத்தல், வன்முறைகள் எழும் போது உடனடியாக அந்த இடங்களுக்கு சென்று தக்க நடவக்கைகளை எடுக்கும், மக்களுக்கு நம்பிக்கையினை வழங்கும் ஒரு தலைவராக இருந்தார். இறுதிக்காலத்தில் மலையகப் பல்கலைக்கழகத்தினை உருவாக்கவதில் பெரிதும் அர்ப்பணிப்பினைக் காட்டினார். அவரின் தலைமைத்துவம் தொடர்பாக பல விமர்சனங்கள் உண்டு –ஆயினும் ஒரு தைரியமிக்க தலைவரை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் இன்று அதிகளவில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சவாலான காலத்தில் அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது. தற்போதைய அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு மலையக மக்களைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இன்று சிதறடிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, ஒரு வகையான அதிகார சமநிலையும், ஆரோக்கியமான போட்டி அரசியல், கட்சி அரசியல் கலாசாரம் ஒன்று மலையகத்தில் உருவாகிய குறுகிய காலத்தில் ஆறுமுகன் அவர்களின் மறைவு பெரும் ஏமாற்றத்தினையும் மலையக அரசியலின் எதிர்காலம் தொடர்பாக ஒருவகையான அச்சத்தினையும் ஒளி மங்கிய எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியில் இரண்டாம் தலைமைத்தும் இன்மையானது கட்சியின் எழுச்சியனை மாத்திரமன்றி முழு மலையக சமூகத்தினையும் பாதிக்கும். இந்த அரசியல் இடைவெளி எவ்வாறு நிரப்பப்படும் என்பது பலரின் கேள்வியாகும். மறுபுறமாக, தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த இடைவெளியினை எவ்;வாறு சரிசெய்யும் என்பது பிரிதொரு வினாவாகும்.
இ.தொ.காவின் எதிர்காலப் பயணத்துக்கு கட்சிக்குள் ஒற்றுமை பெரிதும் அவசியம் – இத்தைகைய மாபெரும் ஸ்தாபனத்தை பாதுகாக்க வேண்டும் – அது ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைமைத்துவம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். பெரும் அளவிலான ஆதரவாளர்களையும் உடைமைகளையும் கொண்ட இந்நிறுவனத்தினைக் கட்டியெழுப்ப நீண்டகால திட்டங்கள், அரப்பணிப்பு, ஜனநாயக தலைமைத்துவம் ஆகியன அவசியமாகும். மலையகக் கட்சிகளை ஜனநாயகப்படுத்தல் பெரிதும் அவசியமாக உள்ளது. மலையக மக்களின் ஒரு சில பிரச்சினைகள் தீர்க்கப்படடடிருந்தாலும் இன்னும் எண்ணற்றப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியவை. எதிர்காலத்தில் மலையக மக்களின் மனித பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. இன்று தோட்டக்காணிகளை வெளியால் பலவந்தமாக கைப்பற்றும் நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பல சவால்கள் எதிர்காலத்தில் காத்திருக்கின்றன.
பதுளை, நுவரெலியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் என்னவாகும்? அங்குள்ள மலையக மக்களின் வாக்குகள் எவ்வாறு சிதறடிக்கப்பட போகின்றன என்பன இச்சமூகத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் தலைமைகள் மீதுள்ள பிரதான சவால்களாகும். இத்தகைய நெருக்கடியான காலத்தில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு சிறுபான்மை மலையக மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு எதிர்காலத்தின் மலையக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை ஊகிக்க முடிகின்றது.