சுமனரத்னதேரர், ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

339 0

gnaaa-720x480மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் செயலர் ஞானசாரதேரர் ஆகியோரைக் கைதுசெய்யுமாறு சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு சிவில் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஞானசார தேரர் தொடர்ந்தும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு அச்சுறுத்தல் விடுத்து வருபவர்.

அவரை தொடர்ந்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருபவராக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்த தேரர் விளங்குகிறார். குறித்த தேரர் மோசமான இனவாதக் கருத்துக்களையும், கீழ்த்தரமான மொழிநடையையும் பயன்படுத்தி சீருடை அணிந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே ஒரு அரச கிராம அலுவலகரைத் திட்டியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர், கிராம அலுவலகரைப் பாதுகாக்கவோ, தேரரைத் தடுக்கவோ எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளைக் கண்டிக்கவோ அல்லது குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவோ இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினால் ஆழ்ந்த விரக்தி அடைந்துள்ளோம்.

எனவே சட்டங்களை மீறி இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் பௌத்த தேரர்கள் அடங்கலாக அனைவரையும் உடனடியாக காவல்துறையினர் கைதுசெய்யவேண்டுமெனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.