மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்கு பயிர்ப் பாதுகாப்புப் பணிகளுக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, நடவு முடிந்த இரண்டாவது மாதத்தில் அசாடிராக்டின் மருந்தினையும், இரண்டாம் முறையாக புரோபினோபாஸ் அல்லது தயோமீதாக்சேம் மருந்தினையும் தெளிப்பதற்காக ஹெக்டருக்கு ரூ.1,750 வீதம் 3,112 ஹெக்டரில் பயிர்ப்பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாவுப்பூச்சியின் தாக்குதலை கணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.