சவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம்

295 0

சவுதி அரேபியாவின் பல்பொருள் அங்காடியில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்காமல் காகங்கள் கூட்டம் தாக்குதல் நடத்தியதாக கூறும் வீடியோவின் உண்மை விவரங்களை பார்ப்போம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இதர பேரழிவுகளுக்கு மத்தியில், மக்கள் சமூக வலைதள பதிவுகளை மிக எளிதில் நம்ப துவங்கிவிட்டனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் ஒரு பகுதியில் ஒன்றுகூடி மக்களை அச்சுறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. திடீரென ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்றுகூடியதை பார்க்கும் நெட்டிசன்கள், உண்மையில் இது உலக அழிவின் ஆரம்பமா என்ற கேள்வியுடன் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

உண்மையில் வைரல் வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்படவில்லை. இந்த வீடியோ டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள வால்மார்ட் விற்பனையகத்தின் வெளிப்புறம் எடுக்கப்பட்டதாகும். இதுதவிர வைரல் வீடியோ டிசம்பர் 14, 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். வீடியோவில் அச்சுறுத்தும் பறவை காகங்கள் இல்லை. அவை கிராக்கிள்ஸ் எனும் பறவை ஆகும்.

அந்த வகையில் வைரல் வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்படவில்லை என்பதும், வீடியோவில் இருப்பவை காகங்கள் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.