மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்

250 0
ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக நாளை கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று தெரிவித்ததாவது,

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டமையானது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனே இடம்பெற்றதாகவும் அது எவ்விதத்திலும் கட்சியின் யாப்பினை மீறி இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுவதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கட்சியின் யாப்பின் அடிப்படையில் வேறு ஒரு அரசியல் கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை கையளிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் முழு அனுமதியையும் பெற வேண்டும் என்ற போதும் குறித்த உறுப்பினர்கள் எவரும் எவ்வித அனுமதியையும் எழுத்துமூலம் பெற்றிருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ள நபர்களுக்கிடையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

அவர்களுக்கு எழுத்துமூலம் விளக்கமளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் உறுப்புரிமை நீக்கப்படுவதுடன் தொடர்புடைய கடிதம் பதிவு தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளர் வழக்கறிஞர் நிஸ்ஸங்க நாணயக்கார குறிப்பிட்டிருந்தார்.