உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக சிறிலங்காவில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் சிறிலங்காவில் எரிபொருள் விலை குறையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒரு ஆண்டிற்கான ஏற்றுமதியாக 11 பில்லியன் ரூபாய்கள் எமக்கு கிடைக்கிறது. ஆனால் இறக்குமதிக்கான 22 பில்லியன் ரூபாய்கள் செலவாகின்றது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் 11 பில்லியன் ரூபாய்கள் நெருக்கடியிலேயே எம்மால் பயணிக்க வேண்டியுள்ளது.
எனினும் கொவிட் -19 நெருக்கடியை அடுத்து மேலும் பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்தி குறைந்துள்ளது. சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது.
எனவே வெளிநாட்டு நிதி எமக்கு கிடைக்கவில்லை. ஆகவே இந்த நிலைமை நாட்டில் தொடர்ந்தாள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
எனவே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். விவசாயம், தேசிய உற்பத்தி என்பவற்றை பலபடுத்துவன் மூலமாக எம்மால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். அதற்காகவே ஏற்றுமதி, இறக்குமதியில் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை வங்கியில் எண்ணெய் கணக்கொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எமக்கு கிடைக்கும் நிவாரண நிதியை சேர்த்து பெற்றோலிய கூட்டுத்தாபன கடனை செலுத்துவதே எமது நோக்கமாகும்.
இதில் யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எரிபொருள் விலை குறையாது. உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இங்கும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.