கொரோனா ஒழிப்பிற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பினை டெங்கு ஒழிப்பிற்கும் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாச்சி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா ஒழிப்பிற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுக்கு வைரஸ் தொற்றுடனேயே வருகை தருகின்ற நபர்களால் நாட்டில் சமூக பரவல் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். விமானநிலையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் நாம் அவர்களுடன் செயற்படுகின்றோம்
அதே போன்று அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லல் , தனிமைப்படுத்தல் நிலையத்திலிருக்கும் போது அவர்கள் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லல் என்பவை தொடர்பில் சுகாதாரத்துறை மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது.
எனவே வெளிநாடுகளிலிருந்து தொற்றுக்குள்ளாகி வருகை தருபவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்ததன் பின்னர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்படுபவர்கள் என்போர் மூலம் சமூக தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்பதை பொறுப்புடன் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். அதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
நாட்டுக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டும்.
கொரோனாவிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதைப் போன்று டெங்கு அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 150 பேர் உயிரிழந்தனர். இவ்வருடத்தில் இந்த ஆண்டு இது வரையில் 20 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபபக்சவின் ஆலோசனைக்கு அமைய டெங்கு ஒழிப்பிற்கான விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்றே டெங்கு ஒழிப்பிற்கும் நாட்டு மக்களின் ஒத்துழைப்பினை நாம் கோருகின்றோம்.
அதிக காய்ச்சல் காணப்படுபவர்கள் சில நேரங்களில் டெங்கு நோய்க்கு உள்ளாகக் கூடும். அவ்வாறானவர்கள் மாவட்டத்திலுள்ள பிரதான வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். அத்தோடு வாழும் சுற்றுச்சூழலை தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்றார்.