அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ ஆண்டுதோறும் பல்வேறு தகுதிகளின்கீழ் சில போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ’அலோஹா டீம் ஸ்பிரிட்’ எனப்படும் குழு ஊக்கப் போட்டியில் இந்திய மாணவர்கள் குழு விருதை தட்டிச் சென்றது.நாசாவால் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் (Remotely Operated Vehicle ROV) தொடர்பாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சீனா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, ரஷியா, கனடா, அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே, டென்மார்க், எகிப்து, துருக்கி, போலாந்து உள்ளிட்ட உலகின் 40 நாடுகளை சேர்ந்த மாணவர் குழுக்கள் பங்கேற்றன.
பணியிட பாதுகாப்பு, புதுமையான கண்டுபிடிப்பு, கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் முறை, சந்தைப்படுத்துதல் மற்றும் குழு ஊக்கம் ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் மும்பையில் உள்ள முகேஷ் பட்டேல் தொழிநுட்பவியல் மேலாண்மை பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் உள்பட 13 இந்திய மாணவர்கள் ‘டீம் ஸ்பிரிட்’ எனப்படும் குழு ஊக்கப் போட்டியில் பங்கேற்றனர். ‘ஸ்குருடிரைவர்ஸ்’ என்ற பெயரில் ஒருகுழுவாக இப்போட்டியில் பங்கேற்ற இந்த குழுவினர் ’அலோஹா டீம் ஸ்பிரிட்’ எனப்படும் குழு ஊக்கப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளனர்.