இலங்கையிலுள்ள 32 முஸ்லிம் இனத்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கருத்தாகவே இது அமைந்துள்ளதாக அந்த பேரவையின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.அமைப்புடன் மோதல்களில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டு இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பின்னர் இதுவரை இலங்கையர்களுக்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் இடையில் தொடர்பிருக்கின்றமை குறித்து எந்தவித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை கூறியுள்ளது.
அமைச்சர் கூறுகின்ற விதத்தில் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புள்ளதாக கூறப்படுகின்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை மற்றும் ஜம்மித் உலமா அமைப்பு ஆகியன புலனாய்வு பிரிவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவின் கருத்தின் ஊடாக இனவாதத்தை தூண்டுவதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகளை நடாத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.