சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பிழையானவை வேண்டுமென்றே குறைத்து காண்பிக்கப்படுபவை என சுயாதீன தொழில்சார் நிபுணர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது இருவேறு பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் உள்ளனர். அரசாங்கம் தெரிவிப்பது போல கடற்படையினர் மத்தியில் மாத்திரம் நோயாளர்கள் காணப்படவில்லை என தெரிவித்திருந்தது.
மாகாண மருத்துவ அதிகாரிகளும் பொது சுகாதார பரிசோதகர்களும் அரசாங்கம் வெளியிடும் தகவல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் அரச தகவல் திணைக்கள அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் புள்ளிவிபரங்கள் துல்லியமற்றவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என சுயாதீன தொழில்சார் நிபுணர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சோதனை நடவடிக்கையின்போது நோயாளர்கள் என இனம் காணப்பட்ட முடிவுகளில் 40 வீதம் கூட அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களிற்குள் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் அரச தகவல் திணைக்கள அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர் என சுயாதீன தொழில்சார் நிபுணர்களின் கூட்டமைப்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவர்தன இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
நோயாளர்கள் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் உரிய மருத்துவமனைகளில் இருந்து கிடைத்ததும் உடனடியாக அவற்றை பகிரங்கப்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படைக்குள் மாத்திரம் தற்போது நோய் தொற்று காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் மத்தியில் வைரஸ் தாக்கம் காணப்படுகின்றது. ஆனால் அவற்றை தனிமைப்படுத்தல் முகாம்களுடன் கட்டுப்படுத்தி விட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நிலைமையை குறைத்து சித்தரிக்கின்றோம் என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கின்றோம் என தெரிவித்துள்ள பபா பலிஹவர்த்தன, எங்களிற்கு குறிப்பிட்ட பிரிவுகளில் இருந்து கிடைக்கும் புள்ளிவிபரங்களை தவிர வேறு புள்ளிவிபரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.