இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அன்னாரின் பூதவுடல் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் கொத்மலை, வேவண்டனிலுள்ள தொண்டமான் ‘பங்களாவில்’ மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.