அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.5,000 வழங்கல்; விசாரணை ஆரம்பம்

307 0

கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு  வழங்கப்பட்ட கொடுப்பனவின்போது, அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவருக்கு, ஏப்ரல் மாதம்  தலா 5,000 ரூபாய் என்றடிப்படையில் 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராகவே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, இன்று (26) தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் கனிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, இது தொடர்பில் விசாரணை செய்யுமாறு, பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளரிடம் கோரியுள்ளார்.

இதனையடுத்து விசாரணையை மேற்கொள்ளுமாறு, மாவட்ட உள்ளக கணக்காய்வுப் பிரிவிற்கு,  திருகோணமலை மாவட்டச் செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதற்கிணங்க, குறித்த விசாரணையின் பிரகாரம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென, மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.