இனவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்-நீதியமைச்சர்

316 0

downloadஇலங்கையில் இனவாதத்தையோ மத அடிப்படை வாதத்தையோ ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவைப்படின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பிரயோகித்து இத்தகையோருக்கு எதிராக செயற்பட நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர்,

பௌத்த பிக்கு ஒருவர் வடக்கிற்கு சென்று இந்து மதத்தவர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைத்துள்ளார்.இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார். அவருடன் கலந்துரையாடியதுடன், நிலைமைகளை அவர் புரிந்து கொண்டார்.இது தொடர்பில் நாம் அரச அதிபருடன் பேசி அந்த இந்து பக்தருக்கு காணியைப் பெற்றுக்கொடுத்தோம்.

கடந்த நாட்களில் சமூக வலைதளங்கள் நாட்டுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. பிக்கு ஒருவர் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தூற்றுவதாக இணையதளங்களில் கதை வெளியிடப்பட்டது.அவர்களை தாக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் போன்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இந்த நாட்டில் தௌஹித் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அதன் தலைவர் எனக் கூறப்படும் ஒருவர் பௌத்த மதத்தை கேவலப்படுத்தும் வகையில் கருத்துக் கூறியிருந்தார். அவரை நாம் கைது செய்துள்ளோம்.முஸ்லிம் அடிப்படைவாதமானாலும் சரி, சிங்கள அடிப்படைவாதமானாலும் சரி, வேறு எந்த அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி, இந்த நாட்டில் செயற்படுத்த எவராவது முயற்சிப்பாராயின் அதற்கு இடமளிக்க மாட்டோம்.

முஸ்லிம் அமைப்புக்களை எடுத்துக்கொண்டால், தௌஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமஅத், ஜமாஅதே இஸ்லாம் போன்ற அமைப்புகள் இந்நாட்டில் இயங்குகின்றன. இந்தக் குழுக்களிடையேயும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

சில இடங்களில் மனித கொலையும் இடம்பெற்றுள்ளது. பாரிய சம்பவங்கள் 15 அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களின் உள்ளக முரண்பாடு நாட்டின் தேசிய முரண்பாடாக மாறி நாட்டில் அராஜக நிலைமை ஏற்பட இடமளிக்கமாட்டோம்.கடந்த சில நாட்களாக சர்வதேசத்துடன் இணைந்து, இந்த நாட்டின் சட்ட மறுசீரமைப்பு குறித்து பேசப்படுகின்றது.

முஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து பிரச்சினை எழுப்பப்படுகிறது. இது சமயம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புபட்ட விடயம். இதனை நாம் தடுக்கவில்லை. உரிய தீர்வொன்றை பரிந்துரைக்குமாறு முஸ்லிம் உறுப்பினர்களிடம் பொறுப்பை வழங்கியுள்ளோம்.மாத்தளை பிரதேசத்தில் 13 வயது சிங்கள பெண் பிள்ளையை முஸ்லிம் ஒருவர் பணம் இருப்பதால் திருமணம் முடித்துள்ளார். இதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

முஸ்லிம்களைத் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் திருமண வயது 18 ஆகும். இவ்வாறான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் திசை திருப்ப எடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க மாட்டோம்.

இதேவேளை, சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிட வேண்டும். சமூகவலைத்தளங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இல்லை. இருந்தாலும் அவை சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாயின், அதனூடாக நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்குமாயின், சட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை.

ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் சில சமயத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் இப்போது சட்டங்களை மாற்றி வருகின்றோம். சட்டமறுசீரமைப்பை மேற்கொள்கின்றோம். 19வது சட்டத்தை கொண்டுவந்து நிறுவனங்களை சுயாதீனமாக்கினோம். இப்போது குற்றவியல் தண்டனை சட்டத்தை திருத்தச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

எமது நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக சர்வதேச தரத்திலான அதைவிட சிறந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று யோசனை உள்ளது. சர்வதேசம் எமக்கு என்ன கூறினாலும், எமது நாட்டு மக்களுக்குப் பொருத்தமான சட்டத்தைத்தான் அரசாங்கம் கொண்டுவரும் என நான் தெளிவாகக் குறிப்பிடுகின்றேன்.

இனவாத பிரச்சினைகள் தலைதூக்கி, இரத்தம் வழிந்தோடும் நிலையை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க அவசியமெனில், இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதிருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் மற்றும் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அந்தந்த இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் என சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பௌத்தர்கள் என்ற அடையாளம் எமக்குத் தேவை. அதுபோல இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் அடையாளம் உள்ளது.

ஆனால், அனைவருக்கும் இலங்கையர் என்ற அடையாளம் அவசியம் என்று மேலும் தெரிவித்தார்.