கிழக்கில் பாடசாலைகளைத் திறக்க வசதியாக சிரமதானங்கள் முன்னெடுப்பு

359 0

ஜனாதிபதி செயலகம் பாடசாலைத் திறப்பதற்கான செய்தியை அறிவித்ததும் கிழக்கில் பாடசாலைகளை திறப்பதற்கு வசதியாக பரவலாக சிரமதானங்கள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மாவட்டரீதியாக 1ஏபிசி மற்றும் 1சி பாடசாலை அதிபர்களுக்கு கொரோனவின் பின்னரான பாடசாலைத்திறப்பு தொடர்பில் கூட்டங்களை நடாத்திவருகிறார்.

அக்கூட்டங்களில் பாடசாலைத்திறப்பிற்கு முன்னர் கொரோனா மற்றும் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலைச்சூழல் சுத்தமாக்கப்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் பாடசாலை திறப்பது தொடர்பான செய்தி அறிவித்ததும் பாடசாலைகள் கட்டாயம் தொற்றுநீக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

அதற்கிணங்க அநேகமான பாடசாலைகளில் தற்போது விளையாட்டுக்கழகங்கள் பொதுஅமைப்புகள் சிரமதானத்திலீடுபட்டு வருகின்றன. காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரியில் நேற்று விளையாட்டுக்கழகங்கள் சிரமதானத்திலீடுபட்டன.

இதேவேளை பாடசாலைதிறந்ததும் உயர்தரம் மற்றும் சாதாரணதர வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் அவ்வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை அழைத்து நேரசூசி மற்றும் ஏனைய முன்னாயத்தங்கள் தொடர்பிலும் கூட்டங்களை நடாத்துமாறு கூறப்பட்டதையடுத்து அச்செயற்பாடும் தற்போது நடைபெற்றுவருகிறது.

மேலும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பழையமாணவர் சங்கம் போன்றோரை அழைத்து அதிபர்கள் கலந்துரையாடல்களை நடாத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தேவையேற்படின் சுகாதாரதுறையினரின் ஆலோசனையையும் பெறப்படவேண்டும்.