யாழ்ப்பாணம் – குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று (25) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை – பொற்பதியில் கடந்த 10ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியியதாகவும், பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து தாக்கியுள்ளனர். சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்தனர் என்று கூறி பொலிஸாருக்கு அந்த மூவரும் தகவல் வழங்கியிருந்தனர்.
சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்த்தனர். சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியிருந்தார்.
இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் ஏனைய இருவரையும் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.