சிறிலங்கா இதே நிலைமையில் பயணித்தால் 2021 ஆம் ஆண்டில், பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “மாளிகாவத்தையில் மூன்று உயிர்கள் உயிரிழந்த சம்பவமே, இலங்கை மக்கள் எவ்வாறான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை தெளிவாகக் காண்பிக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் அந்தப் பிரதேசத்தில் இவ்வாறான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும், கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதளவு கூட்டம் இதுவரை வந்ததில்லை.
1500 ரூபாய்க்கு உயிரையே தியாகம் செய்ய வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. மக்களிடம் இன்று பணமில்லை. வேலையில்லை. நாளுக்கு நாள் பொருட்களின் விலைகளும் அதிகரித்து செல்கின்றன.
இதனால், எமது நாட்டில் பொருளாதாரம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துக் கொள்ள முடிகிறது.
கடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு ஆகும்போது, இன்னும் தீவிரமடையும் ஆபத்து காணப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்தீரமான பொருளாதாரக் கொள்கையொன்றை வகுத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது கணக்கிலக்கம் தொடர்பான பிரச்சினையில்லை. இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையாகும். எதிர்க்காலம் தொடர்பான பிரச்சினையாகும்.
எனவே, நாட்டின் பொருளாதாரம் தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என நாம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.