வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்காக பொலிஸாரும் மக்கள் குழுக்களும் முயற்சி செய் கின்ற போதும், மாணவர்களில் சிலரும் வேறு சதிகாரக் கும்பல்களும் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பலாலி வீதியிலுள்ள வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாணவ, மாணவிகள் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல், தெரியாதவர்களால் வழங்கப்படும் தின்பண்டங்களை வாங்கி உண்ணுதல், பரிசுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளல் ஆகிய விடயங்களில் தூரவிலகியிருப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் தெரியாதவர்களிடம் இருந்து எதையும் வாங்க வேண்டாம் என்று கூறி யுள்ளார்கள் என்பதால் வேண்டாம் என்று சிறார்களிடம் திடமாகச் சொல்லுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலம் மாறிவிட்டது. சுயநலம் தலைவிரித்தாடுகின்றது. இன்னொருவரிடம் இருந்து எதனைப் பெறலாம், எதைப் பறிக்கலாம் என்பதே எம்முள் பலரின் சிந்தனையாகப் போய்விட்டது.
அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் நம்பிக்கைப் பாதையில் மிகவும் கவனமாகப் பயணிக்க வேண்டும். இவர் என்னிடம் எதை எதிர்பார்க் கின்றார்? ஏன் இவர் என்னுடன் ஒரு விதமாகப் பழகுகின்றார்? என்றெல்லாம் மாணவ, மாணவியர் சிந்திக்க வேண்டியுள்ளது.
சினிமாஇ கணனி பத்திரிகைகள் காரணமாக இன்றைய மாணவ மாணவி யர் உலக ஞானம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் யாவரும் உங்கள் கல்வி நடவடிக்கைகளில் சிறப்புற செயற்பட வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.