நாடாளுமன்றை சிறிலங்கா அரசாங்கம் கூட்டாமல் இருப்பதனால் ஏற்படும் விளைவுக்கான பொறுப்பை அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கொரோனா அச்சுறுத்தல் இந்த நாட்டில் ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்பதை இன்று அனைவரும் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.
பல்வேறு விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. இப்போது 5 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு எவ்வளவு நிதி சர்வதேசத்திலிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை.
நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளினால் ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் இது எதனையும் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றைக் கூட்ட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், இதனால் ஏற்படப் போகும் விளைவுகளுக்கு அரசாங்கத் தரப்பினர் மட்டுமன்றி அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என நாம் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.