வடக்கில் பொருத்துவீடுகளை திணிப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பிர்கள் பலர் உள்ளபோதிலும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான டி.எம்.சுவாமிநாதன் ‘ஏஜன்ட்’ போன்று செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் வாசிப்பின்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மீன்பிடிக்க பல இடங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் 300 க்கும் அதிகமான லொறிகளில் மீனையும் மரக்கறிகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சென்று வந்தன.
வடக்கிலுள்ள மக்களின் கணிசமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதுள்ளது. அண்மையில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன ஒரு குறிப்பிட்ட நிலங்களை விடுவித்தார். இருப்பினும் அவற்றிலும் கூட இராணுவத்தினர் வேலிகளை அமைத்து வருகின்றனர்.
கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் என்பன அதிகரிக்கப்பட்டபோதும் அவற்றைக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பெண்களை தலைமையாகக் கொண்ட 90 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. யுத்தத்தினால் சேதமடைந்த பகுதி மக்கள் தேசிய அரசாங்கத்தை நம்பியிருந்தனர். இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என காத்திருந்தார்கள்.
65,000 இரும்பு வீடுகளை தலா 2.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமைச்சர் முயன்று வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி பலரும் அந்த வீடுகள் பொருத்தற்றவை என்று கூறியிருந்தார்கள்.
இந்தப் பணத்தில் 1 இலட்சத்து இரண்டாயிரம் வீடுகளைக் கட்டமுடியும். நல்லிணக்கக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராய்ந்திருந்தோம். அத்திபாரம் போட்டும் அமைக்கும் வீடுகளை ஏன் மீள் குடியேற்ற அமைச்சர் தட்டிக்கழிக்கவேண்டுமெனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.