நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்குமாம் கூறுகிறார் மஹிந்த

276 0

நல்லாட்சி அரசாங்கம் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இந்தக் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்திருந்தால் எவ்வாறான விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என  சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளை இலக்குவைத்து தாக்குவதன் மூலம் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் பொருளாதார மீள் எழுச்சியை பலவீனப்படுத்த முயல்கின்றனர் என  மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் தங்களால் முடிந்தால் அவர்களது சம்பளத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அரச சேவையின் சிரேஸ்ட அதிகாரி என்ற அடிப்படையில் வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோள் சுய விருப்பத்துடன் அரசாங்க ஊழியர்கள் சம்பளத்தை வழங்கலாம் என விடுக்கப்பட்டதே என அறிந்திருந்தும் எதிர்க்கட்சியினர், கட்டாயமாக சம்பளத்தை வழங்கவேண்டும் என விடுக்கப்பட்ட வேண்டுகோளாக இதனை சித்திரித்தனர் எனவும் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2006 முதல் 2014 வரை ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் பி.பீ.ஜயசுந்தர முக்கிய பங்களிப்பை வழங்கினார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அவரை போன்ற திறமை வாய்ந்த அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார மீள் எழுச்சி முயற்சிகளை பலவீனப்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இழிவுபடுத்தும் மற்றும் தவறான பிரசாரங்கள் போன்ற நல்லாட்சிகால கலாசாரத்திற்கு கொரோனா வைரஸிற்கு பிந்தைய உலகில் இடமிருக்காது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பொருளாதாரமும் குழந்தைகளின் எதிர்காலமும் நாட்டை நடத்துபவர்களின் தொலைநோக்கு மற்றும் திறன் என்பவற்றில் தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மனியின் பொருளாதாரம் வலுவாக காணப்பட்ட சூழலில் கொரோனா வைரஸ் ஜேர்மனியை தாக்கியுள்ளது. இதனால், தங்களால் மீண்டு எழக்கூடிய பலம் உள்ளதாக ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்க்கல் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இலங்கையின் நிலை இதற்கு எதிர்மாறானது எனவும் தாங்கள் இந்த யதார்த்தத்தை கருத்திற்கொண்டு அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்தவேளை கொரோனா தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என குறிப்பிட்டுள்ள பிரதமர், இலங்கையை ஆட்சி புரிகின்றவர்கள் ஜனாதிபதி முதற்கொண்டு –வெல்ல முடியாது என கருதப்படுகின்ற யுத்தத்தினை வென்றவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், 2006 முதல் 2014 வரை காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பின்னோக்கி சென்றதாகவும் பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.