சமூகத் தொற்று ஏற்படாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பு – பந்துல

340 0

சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவாமல் தடுப்பது அனைவரும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து பலரை கட்டம் கட்டமாக நாட்டு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது.

இவர்களில் சிலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால், நாட்டில் தேசிய சுகாதாரத்தையும் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட சுகாதாரத்தையும் கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து வருகைத்தரும் அனைவரையும் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்திவருகிறோம்.

இந்தப் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். தனிமைப்படுத்தலுக்கான போதிய இடம் இல்லாத காரணத்தினால் ஹொட்டல்கள், சில தனியார் நிறுவனங்களின் கட்டடங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் கட்டடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். இன்னும் 3 ஆயிரம் மாணவர்களை அழைத்துவர நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிலர் குறிப்பிட்ட கால எல்லையை நிறைவு செய்து, நோய்த் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாம் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். எனினும், அனைத்தும் ஒரு வரையறைக்குள்தான் நடைபெற்று வருகிறது.

எனவே, கொரோனா வைரஸை சமூகத்திற்குள் பரவ விடாமல் தடுப்பது எம் அனைவரதும் பொறுப்பாக உள்ளமையால், மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இது அரசாங்கத்துக்கும் பாரிய ஒத்துழைப்பாக அமையும்.” என கூறினார்.