புனித ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்புக் காலம் முடிந்து வானில் பிறை காணப்பட்டதையடுத்து வளைகுடா நாடுகள் அனைத்திலும் இன்று புனித ரமலான் பண்டிகை தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்துக் கொண்டாடப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவரும் உற்சாகமாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் நோன்புக் காலம் முடிந்து நேற்று பிறை தென்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு அறிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், இராக், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும், தொழுகை நடத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ரமலான் பண்டிகை காலத்தில் லாக்டவுனை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் முடிவு செய்து, பொதுமக்கள் கூடவோ, கூட்டமாக தொழுகை நடத்தவோ தடை விதித்துள்ளனர்.
குறிப்பாக சவுதி அரேபியாவில் மே 23-ம் தேதி முதல் 27-ம் தேதி நாடு முழுவதும் தீவிரமான ஊரடங்கைக் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் உரிய அனுமதி பெற்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நேரங்களில் வெளியே வர அடுத்த 5 நாட்களுக்கு அனுமதியில்லை.
மக்கள் புனித ரமலான் பண்டிகையை வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொண்டாட வேண்டும், சமூக விலகலைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் கூறுகையில், “எங்கள் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கை, மீட்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாத்து வருகிறது. மக்கள் வீட்டிலேயே இருந்து ரமலான் பண்டிகையைக் கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வீட்டில் இருந்தாலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
ஓமன் நாட்டின் மத விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரக நிலவு பார்க்கும் குழு 23-ம் தேதியை ரமலான் மாதத்தின் கடைசி நாள் என்றும் 24-ம் தேதி ரமலான் பண்டிகையைக் கொண்டாடலாம் என்றும் அறிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள நிலவு பார்க்கும் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ரமலான் மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமையாகும். ஞாயிற்றுக்கிழமை (24-ம் தேதி) அனைவரும் ரமலான் பண்டிகையைக் கொண்டாடலாம். ஷாவல் மாதம் பிறக்கிறது” எனத் தெரிவித்துள்ளது
ரமலான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் ஷாப்பிங் மால்கள், சந்தைகள், கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், கரோனா வைரஸ் அச்சம், ஊரடங்கு, சமூக விலகல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கடைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஷாப்பிங் மால்களில் செலவு செய்யும் தொகையை முஸ்லிம்கள் பெரும்பாலானோர் ஏழைகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் கரோாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது சவுதி அரேபியாதான். அங்கு இதுவரை 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 364 பேர் உயிரிழந்துள்ளனர்.