பொதுமுடக்கக் காலத்தை சற்றும் வீணடிக்காமல் கிராமத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கம்புச் சண்டை உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகளை இலவசமாக கற்றுத்தந்து கொண்டிருக்கிறார் சீர்காழியைச் சேர்ந்த சிலம்ப ஆசான் சுப்பிரமணியன்.
நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ‘வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழக’ நிறுவனர் சிலம்பக்கலை ஆசான் சுப்பிரமணியன். இவரும் இவரது மாணவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சிலம்பப் பள்ளி மூலம் கட்டணம் பெற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கலைகளைப் பயிற்றுவித்து வந்தாலும், ஒவ்வொரு வருடமும் கோடைக் காலத்தில், சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கோடைக்காலப் பயிற்சிகளை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் சுப்பிரமணியன்.
இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால் அப்படி சிறப்பு முகாம் நடத்த முடியவில்லை. ஆனாலும் சோர்ந்து போய்விடாத சுப்பிரமணியன் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கும் மாணவர்களைத் தேடி அவர்களின் இருப்பிடத்திற்கே செல்ல முடிவெடுத்தார்.
இதற்காக அவரது மாணவர்களும் தயாரானார்கள். அவரவர் ஊர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய ஊரை பயிற்சி மையமாக்கினார் சுப்பிரமணியன். அதன்படி, திருவெண்காடு, கீழமூவர்கரை, சீர்காழி, சிதம்பரம் ஆகிய நான்கு ஊர்கள் பயிற்சி மையங்களாக உருவெடுத்தன. இப்போது அங்கெல்லாம் ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கெல்லாம் பயிற்சி நடைபெறுகிறது. ஒருநாள் சுப்பிரமணியன் கட்டாயம் செல்வார். மறுநாள் அவர் வேறு ஊருக்குச் செல்ல, அவரது மாணவர் அந்த ஊருக்குச் சென்று பயிற்சியைத் தொடர்கிறார்கள்.
சிலம்பக்கலையில் அடிப்படையான குரங்குப் பாய்ச்சல், குத்துவரிசை, புலிவரிசை, அடிமுறை சிலம்பம், போர் சிலம்பம், அலங்கார சிலம்பம், மான்கொம்பு, சுருள், வாள் வீச்சு, வாள் கேடயம் போன்ற பல்வேறு பாரம்பரியக் கலைகள் அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தரப்படுகின்றன.
இதுகுறித்து சுப்பிரமணியன் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “இவை இளைஞர்களுக்குத் தற்காப்புக் கலையாகவும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவியாகவும் இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட இந்தப் பயிற்சிகள் மூலம் உடல் கூடுதல் வலிவு பெறும். என்னுடைய இந்த முயற்சியின் மூலம் நமது பாரம்பரியக் கலைகள் அனைத்தும் சிறு கிராமங்களில் உள்ள இளைய தலைமுறையினரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தற்போது நான்கு இடங்களிலும் சேர்த்து மொத்தம்150 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இன்னமும் ஆர்வமுள்ள யார் வந்தாலும் அவர்களுக்கும் இலவசமாகக் கற்றுத் தர தயாராகவே இருக்கிறேன்” என்றார்.