கடனுக்கான தவணையை ஒத்திவைப்பது போதாது; 6 மாதங்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்க: வாசன்

390 0

ரிசர்வ் வங்கி கடனுக்கான தவணையை ஒத்திவைத்தது முழு பலன் தர வேண்டுமென்றால் 6 மாதத்திற்குப் பிறகு எக்காரணத்திற்காகவும் கூடுதல் தொகை வசூல் செய்யக்கூடாது. வட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் பெரும் பலன் தரும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

”பொதுமக்கள் – பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசத்தை 6 மாதமாக நீட்டித்தது வரவேற்கத்தக்கது. அதாவது கரோனாவால், ஊரடங்கால் நாடு முழுவதும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

அதாவது விவசாயத் தொழில், சிறு குறு நடுத்தர தொழில் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் வருமானம் ஈட்டுவது பெருமளவு குறைந்துவிட்டது. தனியார் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் முடங்கிவிட்டதால் பல தரப்பட்ட மக்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான கடன் தவணையை ரிசர்வ் வங்கி முதற்கட்டமாக 3 மாத காலத்திற்கு ஒத்திவைத்தது. இதனால் கடன் வாங்கியவர்கள் பயனடைகிறார்கள்.

மேலும் கரோனா பரவலால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பொது மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கியவர்களுக்கான மாதத் தவணைக் காலத்தை ஆகஸ்ட் 31 வரை மேலும் 3 மாத காலத்திற்கு ஒத்திவைத்தது ரிசர்வ் வங்கி. இதுவும் நல்ல அறிவிப்புதான்.

எனவே 6 மாத காலத்திற்கு கடன் தவணை செலுத்தத் தேவையில்லை என்பதால் கடன் வாங்கியவர்கள் தற்காலிகமாக சிரமத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள்.

இருப்பினும் இந்த 6 மாத காலத்திற்கான வட்டித் தவணையை பின்னர் செலுத்த நேரிடும் போது கூடுதல் வட்டியோ அல்லது வேறு ஏதேனும் தொகையோ கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக அர்த்தம். அதை விடுத்து 6 மாத காலத்திற்கு பிறகு அசல், வட்டி என சேர்த்து ஏதேனும் கூடுதலாக மாதத்தவணைத் தொகையை வசூல் செய்ய முன்வரக்கூடாது.

குறிப்பாக கொரோனாவால் மக்கள் அடைந்துள்ள பொருளாதார சிரமமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்ற வேளையில் ஏற்கெனவே உதவும் நோக்கத்தோடு மாத வட்டித்தவணையை ஒத்திவைத்தது முழு பலன் தர வேண்டுமென்றால் 6 மாதத்திற்குப் பிறகு எக்காரணத்திற்காகவும் கூடுதல் தொகை வசூல் செய்யக்கூடாது.

தொடர்ந்து பொதுமக்களின் பொருளாதாரப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு வட்டிக்கான மாதத்தவணைக் காலத்தை ஒத்திவைத்தால் மட்டும் போதாது வட்டித் தொகையையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் பெரும் பலன் தரும்”.

இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.