பிரதமர் வாக்குறுதிகள் தருவார் ஆனால் நிறைவேற்றமாட்டார். பிரதமரையும் அரசாங்கத்தையும் நம்பி நம்பியே தமிழர்கள் ஏமாற்றத்தை எதிர் நோக்குகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள், வடக்கிற்கு அரசாங்கம் கொடுத்துள்ள முன்னுரிமை எத்தகையது என்பதை சிந்திக்க வைக்கும் விதமாக அவரது உரை அமைந்திருந்ததாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
வரவு செலவுத்திட்டத்தின்படி வடமாகாணத்துக்கு பாரிய அபிவிருத்தி என்பது வெறும் கண்துடைப்பாகவே அமைந்துள்ளது.
காரணம் கடந்த வருட வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போது நிதியமைச்சர் வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தினை முழுமைப்படுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களுக்ககாக 1 இலட்சம் வீடுகள் கையளிக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் இன்று வரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.