சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா நேற்று (22) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஐந்தாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி செயலாளர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா குறித்த கடிதத்தை மன்றில் ஒப்படைத்து இதனை தெரிவித்தார்.
மக்கள் படிப்படியாக புதிய சுகாதார முறைகளுக்கு ஏற்றவாறு மாறி வருவதாகவும், தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் படி புதிய சுகாதார முறைகளை வர்த்தமானியில் வெளியிடுவது பொருத்தமானது என்றும் டொக்டர் அனில் ஜாசிங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கோரினால் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அந்த கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா தெரிவித்தார்.
நாட்டில் உள்ள தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்த முடியாத சூழலை தாம் காணவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே சுகாதார பணிப்பாளர் நாயகம் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு எந்தப் பக்கத்திலிருந்து பச்சை கொடி காட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது எனவும் அவர் மன்றில் வினவினார்.
இதேவேளை சட்டமா அதிபர் சார்பாகவும், சுகாதார பணிப்பாளர் நாயகம் சார்பாகவும் மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா மன்றில் ஆஜரானார்.
இதன்போது தமது வாதத்தை முன்வைத்த அவர் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் சட்டமா அதிபர் தமது அடிப்படை ஆட்சேபனைகளை தாக்கல் செய்வார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே மனுக்களை தொடர்ந்தும் விசாரிக்காது அவற்றை தள்ளுப்படி செய்ய வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது 304 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் அவர் வினவினார்.
எனவே மனுதாரர்களின் வேண்டுகோளின் பேரில் 7400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நேரடியாக பாதிக்க கூடிய தீர்ப்பை வழங்க முடியாது எனவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.