இங்கிலாந்தில் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் பயன்படுத்த சொல்லி உயிருக்கு உலை வைக்கும் அரசு உத்தரவை எதிர்த்து இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு தொடருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு இதுவரை அந்த வைரஸ் தாக்குதலுக்கு 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆளாகி இருக்கிறார்கள். 36 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.
அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்திய டாக்டர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆபத்தான உத்தரவு ஆகும். ஏனெனில், மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துகிறபோது அதனூடே கொரோனா வைரஸ் ஊடுருவி டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடும்.
ஏற்கனவே இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டனர்.
இந்த விவகாரத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் தம்பதியர் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் டாக்டர் நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் ஆவார்கள். மினால் விஸ் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.
கடந்த மாதமே இவர்கள் இங்கிலாந்து அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சுகாதாரத்துறையின் பதில்களை கோரினர்.
ஆனால் அதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர்கள் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு எளிய கேள்விகளை எழுப்பினோம். அப்போது 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டிருந்தனர். சுகாதார மந்திரி மேத் ஹான்காக்குடன் ஒரு வெளிப்படையான பேச்சு வார்த்தையையும், விரைவான நடவடிக்கையையும் எதிர்பார்த்தோம். ஆனால் நடக்கவில்லை.
இந்த கஷ்டங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே உயிரிழப்புகளை சந்தித்த குடும்பங்களில் இருந்து பலரும் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள் சுய பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கருவிகளின் தோல்வி குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களின் இழப்புகளால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சுய பாதுகாப்பு கவசங்களின் தேவையை குறைக்கவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் வழிநடத்துகிற அரசின் வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த தம்பதியர் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளனர்.
இப்படி பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தச்சொல்வது என்பது உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது, சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்ட பாதுகாப்பையும், மனித உரிமைகளையும் மீறுகிறது என்று வாதிடப்படுகிறது.
இந்திய டாக்டர் தம்பதியர் டாக்டர் நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் வழக்கு செலவுக்காக நன்கொடையும் திரட்டுகிறார்கள். அந்த வகையில் 35 ஆயிரத்து 458 பவுண்டு (சுமார் ரூ.33 லட்சம்) வசூலாகி இருக்கிறது.
மேலும் இந்த தம்பதியர் சமூக வலைத்தளங்களில் பிரசார இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூலமாகவாவது தங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து சுகாதார பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.